இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான சம்பிரதாயரீதியான தொடர்புகளை மென்மேலும் விரிவுபடுத்தி அரசியல் ஒத்துழைப்பு ஊடாக பொருளாதாரத் தொடர்புகளைப் பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இரு தரப்பினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கையின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வியட்நாமின் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாம் பின் மின் அவர்களுக்குமிடையே (Hon. Pham Binh Minh) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.
வியட்நாமின் ஹெனொய் நகர இந்து சமுத்திர மாநாட்டிற்கு முன்பாக வியட்நாம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இன்று (27 ஆந் திகதி) இச்சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான இரு தரப்பு வர்த்தகத்தினை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டங்களைச் செயற்படுத்தவதன் தேவை தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கையின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு வியட்நாமுக்கு வருகை தந்தமை, இந்த மாதம் இந்து சமுத்திர மாநாட்டிற்கு வருகை தந்தமை, எதிர்வரும் மாதம் உலக பொருளாதார மாநாட்டிற்கு வருகை தருகின்றமை என்பன மூலம் தமது நாடு தொடர்பாக அவர் கொண்டுள்ள நட்புறவுமிக்க மனப்பாங்கு வெளிப்படுவதாக வியட்நாமின் பிரதிப் பிரதமர் தெரிவித்தார். அது தொடர்பாக பிரதிப் பிரதமர் விக்கிரமசிங்க அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்து சமுத்திர மாநாட்டை நடாத்தும் நாடாக செயற்படுகின்றமை தொடர்பாக விக்கிரமசிங்க அவர்கள் வியட்நாமுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இந்து சமுத்திர மாநாடு ஊடாக பிராந்திய அபிவிருத்தி, அமைதி மற்றும் செழிப்பினை ஏற்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இக்கலந்துரையாடலின்போது விசேடமாகத் தெரிவிக்கப்பட்டது.
கருத்திட்ட முகாமைத்துவம், இளைஞர் அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதம அமைச்சரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க, பிரதம அமைச்சரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சமுத்திர அலுவல்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரிவின் பணிப்பாளர் சஷிகலா பிரேமவர்தன, உதவிச் செயலாளர் ருவன் குணவர்தன, பிரதம அமைச்சரின் விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதில் கலந்துகொண்டனர்.