“எமக்கு அரசியல் தீர்வே மிகவும் முக்கியமானதாகும். எனவே, அபிவிருத்திகளுக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைப்பேச மாட்டோம்” என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நாம் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ள அவர் எமக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முக்கியமாக இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்த போதும் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டியதுடன் காணி விடுவிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.