இலங்கையில் எட்டு மாவட்டங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்க்கமான நீதியை சர்வதேசம் விரைந்து வழங்க வேண்டுமென அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் அமைதியான முறையில் பாரிய பேரணி ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை அலுவலகம் சர்வதேசத்தினை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.
இந்த அலுவலகத்தின் ஊடாக எந்தவொரு நன்மையும் இல்லை. எமது எதிர்ப்பின் காரணமாகவே மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகங்கள் திறக்கப்படுவதில் தாமதங்களை எற்படுத்தி வருகின்றனர். இதேவேளை மன்னார், திருக்கேதீஸ்வரம் போன்ற பிரதேசங்களில் மனித புதைகுழிகள் விவகாரமும் சர்வதேசத்தினை அரசு ஏமாற்றும் ஒரு செயற்பாடாகவே அதனை எமது அமைப்பு கருதுகின்றது. காரணம் அங்கு தோண்டி எடுக்கப்படுகின்ற மனித உடல் எச்சங்கள் எவருடையது என்றும் அது தொடர்பான எந்தவிதமான காத்திரமான உண்மைத் தன்மையையும் அறிந்து கொள்ள முடியாத அளவில் மர்மமாகவே இருந்து வருகின்றது.
இவ்வாறான அரசின் செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஜ.நா.சபையின் 39 ஆவது கூட்டத் தொடரில் சர்வதேசம் விரைந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்க்கமான தீர்வினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தியும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இம்மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை எட்டு மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அமைதியான முறையில் பாரிய கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை திருக்கோவில் பிரதேசத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களது அலவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்படி கருத்தினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.