182
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபை யினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முல்லைத்தீவில் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களான விஜயகுமார் நவநீதன் , வைத்திய நிபுணர் எஸ் .சுதர்சன், மற்றும் இலூஜி ஆம்ஸ்ரோங் அடிகளார் ஆகியோர் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரனை சந்தித்து ஜனாதிபதியிடம் கையளிக்க கோரி மகஜர் ஒன்றிணையும் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
01. மகாவலி எதிர்ப்பு மரபுரிமை பேரவையினராகிய நாங்கள் முல்லை மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கிராமமட்ட அமைப்புக்கள் சார்பாக எமது அதிருப்தியினைத் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மகாவலி திட்டத்தினால் இழைக்கப்படுகின்ற அநீதிகள் மற்றும் எமது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாக தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் தவற விட விரும்பவில்லை.
02. மணலாறு (வெலியோயா) பிரதேச செயலாளர் பிரிவை மையப்படுத்தி வட மத்திய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை உள்ளடக்கிய வகையிலே மகாவலி எல் (L) வலயத்திட்டத்தின் கீழ் பாரிய உள்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் நடைபெறுவதனை நாமறிவோம். 2009 போர் முடிவடைந்த பின்னர் மகாவலி ” எல்” வலயத்தின் கீழ் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் 6000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
இக்குடியேற்றங்களுக்காக 1984 ஆம் ஆண்டு பலவந்தமாக விரட்டியடிக்கபட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான 2000 ஏக்கர் காணிகளும் மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளும் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
குடிநீர் வளங்கல், மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளக்காக 3000 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி மகாவலி அபிவிருத்தி திட்டதின் கீழ் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் செலவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினூடாக தமிழர்களுக்கு எந்தப் பயனும் இன்றுவரை கிடைக்கவில்லை.
03. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட எல்லைகளை உள்ளடக்கிய மணலாறு பிரதேச செயலகப் பிரிவானது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும், வட கிழக்கின் எல்லைகளை துண்டாடி வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிப்பதற்கான அரசின் தந்திரோபாய நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.
04. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பெரும் பகுதிகள் மகாவலி அரசாணையின் கீழ் ஏற்கனவே மகாவலி ”எல் (L)” வயலத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் மகாவலி தனது நடவடிக்கைகளை மணலாறு பிரதேச செயலாளர் பிரிவோடு மட்டுப்படுத்தியிருந்தது.
அண்மையில் கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகாரசபையினால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதனூடாக மகாவலி அதிகார சபையானது கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தினை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.
05. மகாவலி எல் (L) வலய மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மகாவலி வலயங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும் வட மாகாணத்தின் சனத்தொகையை கட்டமைக்கப்பட்ட ரீதியில் மாற்றியமைப்பதற்குமான அரசின் முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.
06. தொல்லியல் திணைக்களம் திட்டமிட்ட வரலாற்றுத் திரிபுகளை மேற்கொள்வதோடு தமிழர்களின் கலாசார மற்றும் சமய முக்கியத்துவம் மிக்க இடங்கள் பழைமை வாய்ந்த பௌத்த விகாரைகளாக உண்மைக்கு புறம்பாக பிரகடனப்படுத்தி வருகிறது.
செம்மலை நீராவி பிள்ளையார் ஆலய பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாகப்பிரகடனப்படுத்தப்பட் டமை அண்மைய உதாரணமாகும்.
07.முல்லைத்தீவின் ஆயிரக்கணக்கான ஏழை மீனவர்களின் வாழ்வாதார மூலமாக இருக்கின்ற நந்திக்கடல் மற்றும் நாயாறுக் களப்புக்கள் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக் கணக்கான ஏழை மீனவர்களின் வருவாய் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும்மோசமாகப் பாதிக்கும் செயற்பாடாகும்.
08. ஜனாதிபதி அவர்களே, போருக்குப் பின்னரான இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முல்லை மாவட்ட மக்கள் சிக்கல் நிறைந்த இடர்பாடுகளை சந்தித்து வருகின்றார்கள். அரசின் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாக எமது மக்கள் சொல்லொணா துன்பங்களை எதிர்கொண்டுள்ளார்கள். உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் இந்த நாட்டின் குடி மக்களான எமக்கு கருத்துக்களை வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதற்கும் நின்மதிப் பெருமூச்சு விடுவதற்கும் எமக்கு அருகதையிருப்பதாகவே கருதுகின்றோம்.
எமது கோரிக்கைகளாவன,
1. மகாவலித் திட்டத்தின் நன்மை, தீமைகள், சவால்கள் மற்றும் சிக்கல் தன்மைகளை கருத்திற் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகாவலி திட்டச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வடக்கின் ஏனைய பகுதிகளில் விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகளை கைவிடுமாறும் தங்களை வினையமுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
2. கொக்கிளாய், கொக்கத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கெணி கடற்கரையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக மீளப் பெற வேண்டும்.
3. 1984 வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான, நீதிக்கு புறம்பாக சிங்கள மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட 2000 வாழ்வாதார நிலங்கள் அதன் உண்மையான உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு மீள வழங்க வேண்டும்.
4. தமிழர்களின் மரபுரிமையை திட்டமிட்டு சீரழிக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிகாரிகளையும் கிராமிய அமைப்புக்களையும் கலந்துரையாடாது வரலாற்று திரிபை ஏற்படுத்தும் நோக்கோடு தன்னிச்சையாகசெயற்படும் தொல்லியல் திணைக்களத்தின் நீதிக்குப் புறம்பான செயல்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
5. வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிக்கும் நோக்கோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேங்களை உடன் நிறுத்த தவறும் பட்டசத்தில் அது இன நல்லிணக்கத்தை மிக மோசமாக பாதிக்கும்.
6. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடல், நாயாற்றுக் களப்புக்கள் மீண்டும் சட்ட ரீதியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட வேண்டும்.
ஆகவே ஜனாதிபதி விரைவாக எமது கோரிக்கைகளை ஏற்று நியாயமான தீர்வினை வழங்குவதனூடாக சமாதானம் நல்லிணக்க முயற்சிகளுக்கு உரமூட்டுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினர் கையளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love