இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான இணைந்த வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்தி இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை புதியதோர் பாதையில் முன்னெடுக்க இருநாடுகளினதும் அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனப்படும் பிம்ஸ்டெக் (BIMSTEC ) உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் மியன்மார் ஜனாதிபதி வின் மைன்ட்டுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (30) நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே மேற்படி விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் மியன்மாருக்குமிடையில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 1999ஆம் ஆண்டு இந்த வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட மியன்மார் – இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது தலைவர்கள் விசேட கவனம் செலுத்தினர்.
இரண்டு நாடுகளும் தேரவாத பௌத்த தத்துவத்தை பின்பற்றும் நாடுகளாகவும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நாடுகளாக இருப்பதன் காரணமாகவும் இரண்டு நாடுகளுக்குமிடையில் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அந்தவகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை இலகுவாக பலப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மியன்மார் ஜனாதிபதி, மிக விரைவில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக குறிப்பிட்டார்.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் மியன்மார் முதலீட்டாளர்களை எதிர்காலங்களில் அதிகளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மியன்மார் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.