முன்னாள் கடற்தொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்தினவுக்கு வெளிநாடு செல்லுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. நீர் கொழும்பு களப்பு அபிவிருத்தியின்போது நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இவருக்கு வெளிநாட்டுத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சரத் குமார இந்தியா செல்ல வேண்டி இருப்பதனால் அவர்மீதான தடையை விலக்குமாறு அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு வெளியிட்ட போதிலும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதியமைச்சர் சரத் குமார குணரத்தினவுக்கு வெளிநாடு செல்ல அனுமதியை வழங்கியுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட சரத் குமார உள்ளிட்ட ஆறுபேரும், தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.