குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அனந்தி சசிதரனுக்கு வடமாகாணசபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறப்புரிமையை மீறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது அவை தலைவர் மேற்படி விடயம் தொடர்பாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு சென்று திரும்பிய மாகாணசபை உறுப்பினர் அமைச்சர் என கூறும், திருமதி அனந்தி சசிதரன் 25.08.2018ம் திகதி தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் வடமாகாணசபையில் நடந்த பல கூட்டங்களில் கூச்சல் குழப்பங்களாக இருந்ததாகவும், மக்களால் விமர்சிக்கப்படும் சபையாக வடமாகாணசபை மாறியுள்ளதாகவும், தற்போது சபை பொழுதுபோக்கு மற்றும் சண்டை பிடிப்பதற்கான சபையாக மாறியுள்ளதாகவும் 30ம்திகதி நடைபெறவுள்ள அமர்வுக்கும் தான் செல்ல விரும்பவில்லை. அமர்வுகளை நடாத்தி நிதி வீண் விரயம் செய்யப்படுவதாகவும் அவை தலைவர் தான் நினைத்தால்போல் பிரேரணைகளை கொண்டுவருவதுடன், நாங்கள் பிரேரணை கொண்டுவந்தால் 15 நாட்களுக்கு முன்னர் கொண் டுவரவேண்டும். என கூறுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியில் அனந்திசசிதரன் பாரதூரமான கருத்துக்களை கூறியுள்ளார். வெடுக்குநாறி மலையை யாத்திரிகர் தலமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் வடமாகாணசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் 15 நாட்களுக்கு முன்னர் பிரேரணைகளை தரவேண்டும் என நான் எங்கும் கூறவில்லை. மேலும் 10 நாட்களுக்கு முன்னர் பிரேரணைகளை தரவேண்டும் என கூறப்பட்டுள்ள நிபந்தனையினையும் நான் அதிகம் கடைப்பிடிப்பதில்லை.
குறிப்பாக இனப்படுகொலை தீர்மானம் இந்த மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது. அது அன்றைய சபை அமர்வு அன்று காலையே முதலமைச்சரால் எனக்கு கொடுக்கப்பட்டது. எனவே அனந்தி சசிதரன் சபையின் சிறப்புரிமையை மீறும் வகையில் பேசியுள்ளார். அதற்கான இந்த சபை கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது என அவைத்தலைவர் கூறினார்.