Home இலங்கை 10 வருடங்கள் பாராளுமன்றில் இருந்தவர்கள் 10 தடவைகள் கூட மகாவலி பற்றி பேசவில்லை….

10 வருடங்கள் பாராளுமன்றில் இருந்தவர்கள் 10 தடவைகள் கூட மகாவலி பற்றி பேசவில்லை….

by admin

நல்லாட்சியில் குடியேற்றம் இல்லை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முல்லைத்தீவு,  வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெறவில்லை. அவை மஹிந்தராஜபக்ஸ காலத்திலேயே நடைபெற்றன. என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கும் நிலையில் அவ்வாறு வழங்கவில்லை. நாங்கள் மக்களை குடியேற்றவில்லை. என அரசு கூறிவரும் கருத்து தொடர்பாக, நேற்றைய தினம் சனிக்கிழமை பருத்துறையில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நாங்கள் ஆராய்தமைக்கமைவாக அமைச்சர் றாஜித சேனாரத்ன கூறிய கருத்து உண்மையானது. ராஜபக்ஸ காலத்திலேயே குடியேற்றப்பட்டார்கள். ஆனால் ராஜபக்ஸ காலத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கு இப்போது காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்.

மேலும் மகாவலி எல் (L) வலய பிரச்சினை இன்று நேற்று வந்த பிரச்சினையல்ல. 1980ம் ஆண்டு தொடக்கம் உக்கிரம் பெற்றுவரும் பிரச்சினை. ஆனால் இப்போது சிலர் வந்து மணலாறு பறிபோனால் தமிழ்தேசம் பறிபோனதற்கு சமம் என கூறுகிறார்கள். இவர்கள் 10 வருடங்கள் நடாளுமன்றில் இருந்தார்கள். அந்த 10 வருடத்தில் 10 தடவைகள் கூட மகாவலி எல் (L) வலய பிரச்சினை குறித்து பேசியிருக்கவில்லை.

எனவே இந்த நபர்களுடைய கருத்து விசித்திரமாக உள்ளது. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் போன்றவற்றில் இந்த காணி பிணக்குகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அரசியலமைப்பிலும் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான பாதுகாப்பை நாங்கள் தேடி கொண்டிருக்கிறோம். அதற்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்பதற்கான போராட்டங்களை செய்யவேண்டும்.

முன்னர் நாங்கள் போராட்டம் நடாத்தியபோது மக்களை காண முடிவதில்லை. காரணம் அன்றைக்கு மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு அச்சப்பட்டார்கள். 2013ம் ஆண்டு நான் நாடாளுமன்றில் ஆற்றிய உரையை அண்மையில் மீள எடுத்து பார்த்தேன்.

அதில் கேப்பாபிலவு, வலி,வடக்கு, முள்ளிக்குளம், போன்ற பகுதிகளில் உள்ள காணி பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன். ஆகவே தொடர்ந்தும் நாங்கள் பேசி வருகிறோம். நான் முன்னர் கூறியதைப் போல் அந்த நாட்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட பயப்பட்டார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தினால் இன்று மக்கள் வீதியில் இறங்கி போராடும் அளவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனை கூறுவதற்கு நான் தயங்கவில்லை. மேலும் பல விடயங்கள் மாறியுள்ளன.

குறிப்பாக கேப்பாபிலவில் சிறிய பகுதி தவிர மற்றய இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. வலிவடக்கில் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி விடுவிக்கப்படாது என்றார்கள். ஆனால் இன்று மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மாற்றங்கள் நடப்பதற்கு பிரதான காரணம் ஆட்சிமாற்றமே.

ஆட்சிமாற்றத்தினால் ஒன்றும் நடக்கவில்லை எனவும், தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்திற்கு உதவியது எனவும் கூறப்படும் கருத்துக்கள் அப்பட்டமான பொய்கள். இதனை கூறுவதற்கும் நான் தயங்கவில்லை.

ஆட்சிமாற்றம் இடம்பெறாவிட்டால் வலி,வடக்கில் 6348 ஏக்கர் காணி அரசாங்கத்திற்கு சென்றிருக்கும். கேப்பாபிலவில் ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்பட்டிருக்காது. முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்டிருக்காது. ஆகவே ஆட்சிமாற்றத்தினால் உண்டான நன்மைகளை மறந்துவிடக்கூடாது. மேலும் நல்லாட்சியில் குடியேற்றங்கள் நடந்ததாக நாம் அறியவில்லை.

சில கரைவலைப்பாட்டு அனுமதிகளை மகாவலி அதிகாரசபை வழங்கியதாக அறிந்தோம். அதற்கு மகாவலி அதிகாரசபைக்கு உரிமை கிடையாது. அதனை சட்டரீதியாக தீர்ப்போம். அதேபோல் குடியேற்றங்களையும் இன்றுள்ள சட்டங்களின் பிரகாரமே தீர்க்க முடியும்.

குறிப்பாக வெளிநாட்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சம்பூர் நிலத்தை நீதிமன்றம் ஊடாக மீட்டோம். அதனை செய்வதற்கு நாங்கள் தயார். ஆனால் அரச தலையீட்டினால் இவை நிறுத்தப்படவேண்டும்.

அண்மையில் ஜனாதிபதி செயலணியிலும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தை தெளிவாக கூறியுள்ளார். ஜனாதிபதி அவ்வாறு நடக்கவில்லை என கூறினாலும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More