461
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே கௌதாரிமுனை, மண்ணித்தலை, கௌதாரிமுனை,விநாசியோடை,கல்முனை போன்ற சிறிய பிரதேசங்கள் இதற்குள் அடங்குகின்றன.115 குடும்பங்களை சேர்ந்த சுமார் 386 பேர் வாழ்கின்றனர் என மாவட்டச்செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கௌதாரிமுனையின் அழகு அல்லது சிறப்பு என்பது ஒன்று அதன் தொன்மை, இரண்டாவது இயற்கை அழகு, குறிப்பாக கௌதாரிமுனையில் காணப்படுகின்ற பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும் கௌதாரிமுனையின் அழக்கினை மேலும் மெருகூட்டுகின்றன இதுவே கௌதாரிமுனையை நோக்கி அனைவரையும் ஈர்க்கிறது. பூநகரி யாழ்ப்பாணம் ஏ32 பிரதான வீதியிலிருந்து 18 கிலோமீற்றர் நீளமான மூன்று பக்கங்களும் கடலினால் சூழப்பட்ட ஒடுங்கிய நிலப்பரப்பாகும்.
கௌதாரிமுனை இற்றைக்கு 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரதேசம் என தெரிவிக்கும் வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் ப.புஸ்பரட்னம், இந்த மக்கள் சுமார் 2300 ஆண்டுகளிலிருந்தே வட இந்தியா, தென்னிந்தியா, சீனா ஆரேபிய நாடுகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் எனவும் குறிப்பிடுகின்றார்.
அந்த வகையில் குறித்த இந்தப் பிரதேசம் மிகவும் பழமையான வரலாற்றுப் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுத் தொன்மையினையும், இயற்கை அழகினையும் கொண்ட இந்த பிரதேசம் தற்போது அதிலிருந்து விடுப்பட்டு செல்வதனால் கௌதாரிமுனை மக்களை மாத்திரமன்றி கௌதாரிமுனையை அறிந்த மக்களையும் கவலையடைச்செய்துள்ளது. வெள்ளை ஆடையுடன் இருக்கும் ஒரு தேவதையிடமிருந்து துண்டு துண்டுகளாக ஆடையினை வெட்டியெடுக்கும் செயற்பாடுகள் போன்றே கௌதாரிமுனையின் மணல் மேடுகள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இது இவ்வாறே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் கௌதாரிமுனை நிர்வாணமாகிவிடும் அதன் பின் கௌதாரிமுனையை எல்லோரும் மறந்தவிடுவார்கள் என கவலை தெரிவித்த முதியவர் ஒருவர், இதனாலேயே கௌதாரிமுனையை காப்பாற்றுங்கள் என்கிறோம். என்றார்.
அவரின் கவலை ஆதங்கம் கோபம் அனைத்து நியாயமானது. கௌதாரிமுனை அதன் இயல்பை இழந்து செல்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது. கௌதாரிமுனை ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டது. இதன் ஒரு பகுதியில் உள்ள கடல் அதன் எதிர் பக்கத்தில் உள்ள கடலை சந்திக்கவிடாது தடுத்து நிற்பது இடையில் காணப்படுகின்ற மணல் மேடுகளே. இந்த மணல் மேடுகள் எப்போது இல்லாது போகிறதோ அப்போது இரண்டு பக்கங்களின் கடல் நீரும் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் நிலைமை உருவாகும், இரண்டு பக்க கடல்களுக்கு இடையே குறுக்குவெட்டு நீளம் சில இடங்களில் ஒரு கிலோமீற்றராகவும், வேறு சில இடங்களில் அதனிலும் குறைவாகவுமே காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கே உள்ள காணிகளில் பெரும்பாலனவை பழமையான காணி உறுதிகளை கொண்;ட தனியார் காணிகள். இக் காணிகளுக்குச் சொந்தமான பலர் கௌதாரிமுனையை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்திலும், வேறு சில பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். யுத்த காலத்தில் அங்கிருந்து வெளியேறி மக்கள் மீண்டும் கௌதாரிமுனைக்கு திரும்பாதிருப்பதற்கு, போக்குவரத்து வசதியின்மை, போதிய கல்வி வதியின்மை, பற்றாக்குறையான அடிப்படை சுகாதாரம், வாழ்வாதார நெருக்கடி போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன. இங்கு தற்போது வாழ்கின்ற மக்களின் பிரதான தொழில் ஒன்று கடற்றொழில் இரண்டாவது சீவல் தொழில்.
இது ஒருபுறமிருக்க கௌதாரிமுனைக்கு வெளியே வாழ்கின்ற இங்குள்ள காணிகளுக்குச் சொந்தக்காரர் பல தங்களது காணிகளை மணல் வியாபாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொருவரது காணிகளிலும் குறைந்தது ஒரு மணல் மேடாவது காணப்படும். குறித்த காணிகளை பல இலட்சங்களுக்கு கொள்வனவும் செய்தவர்கள் அங்குள்ள மணலை கொள்வனவு செய்த தொகையிலும் விட மேலும் பல இலட்சங்களுக்கு மேல் விற்பனை செய்கின்றனர். மீள்குடியேற்றத்தின் ஆரம்பத்தில் இச் செயற்பாடுகள் அதிகம் இடம்பெற்றபோதும் தற்போது அவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்குகளை கொண்டுள்ளவர்கள் இன்றும் கௌதாரிமுனையிலிருந்து மணலை வெளியே கொண்டுசென்றுகொண்டிருக்கின்றார் கள். 2010 மீள்குடியேற்ற காலத்தில் காணப்பட்ட அழகான பல மணல் மேடுகள் தற்போது இல்லை என்கின்றனர் பொது மக்கள்.
இதனை தவிர சில மணல் வியாபாரிகள் காணி உரிமையாளர்களிடமிருந்து அவர்களது காணிகளில் உள்ள மணல் மேடுகளை மாத்திரம் விலைபேசி பெற்றுக்கொள்கின்றனர்; பின்னர் அவற்றை அகழ்ந்;து வெளியே எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். இச்செயற்பாடுகள் எதிர்காலத்தில் கௌதாரிமுனையின் இயற்கை அழகை இல்லாது செய்வதோடு அந்த ஒடுங்கிய நிலப்பரப்பை கடல் காவு கொள்வதற்கும் வழி சமைக்கும் நிலை உருவாகிறது.
இதனை தவிர கௌதாரிமுனையின் மற்றொரு சிறப்பம்சம் அங்குள்ள மண்ணித்தலை சிவன் ஆலயம். இது சோழர் காலத்து சிவன் ஆலயம் என வரலாறுகள் குறித்து நிற்கின்றன. இந்த ஆலயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைகழக வரலாற்று பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் குறித்த ஆலயமானது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர் அநுராதபுர அரசை வெற்றிக்கொண்டு 77 ஆண்டுகள் இலங்கையில் ஆட்சி புரிவதற்கு முன்னர் அவர்களின் ஆதிக்கமும், அரச தலைநகரங்கள் சிலவும் வட இலங்கையில் இருந்துள்ளதை இப்பிராந்தியத்திலுள்ள சோழர்கால தொல்லியற் சான்றுகள் உறுதி செய்கின்றன எனவும் அதற்கு மண்ணித்தலை சிவன் ஆலயம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிடுகின்றார்.
அத்தோடு மணல் மேடுகள் நிறைந்த மண்ணித்தலை பிரதேசத்தில் கிடைக்கபெறாத முருகைக் கல்லையும், செங்கட்டிகளையும் கொண்டு இவ்வாலயம் கட்டப்பட்டதை நோக்கும் போது தொழிநுட்பமும்,மூலப்பொருட்களும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்றும் புஸ்பரட்ணம் மேலும் தெரிவிக்கின்றார்.
அத்தோடு பல ஆண்டுகளாக இவ்வாலயம் கவனிப்பாரற்று கிடக்கிறது. ஆலயத்தின் விமானத்தின் பெரும் பகுதியும், கூரை உட்பட முன்பகுதியும், அத்திபாரமும் பெருமளவு இடிந்து விழுந்து மண்ணில் மூடுண்டு கிடப்பதனால் முழுமையான தொல்லியல் அகழ்வுகளை மேற்கொண்டு முழு விபரங்களையும் பெற முடியாது இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே அங்குள்ள பொது மக்களின் கோரிக்கைகளில் முக்கியமானது இந்த சோழர் காலத்து வரலாற்று ஆலயமான சிவன் ஆலயத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதே. தங்களின் ஊரின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்ற இவ் ஆலயத்தை தற்போது இருக்கின்ற இதே நிலையில் விட்டால் எஞ்சிய பகுதிகளும் இடிந்து விழ்ந்து இல்லாது போய்விடும் என கவலை தெரிவிக்கின்றனர். இச் சிவலாயம் உரிய முறையில் பேணி பாதுகாப்பப்படவில்லை என்பது கிராம மக்களின் கவலையாக உள்ளது. இதனை உரிய தரப்பினர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாகவும் உள்ளது.
கௌதாரிமுனை ஒரு சுற்றுலா பிரதேசத்திற்குரிய பல அடிப்படைகளையும் கொண்டுள்ளது. ஆனால் அவை கவனத்தில் எடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு சுற்றுலாத்துறை அபிவிருத்தியை ஏற்படுத்தும் எவ்வித திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. கௌதாரிமுனையை பற்றி அறிந்தவர்கள் மாத்திரம் அங்கு சென்று மண்ணித்தலை கோவிலை பார்ப்பதோடு, பெருமளவானவர்கள் சிறுவர்களுடன் சென்று அங்குள்ள மணல் மேடுகளில் பொழுதை கழித்து வருவதையே வழமையாக கொண்டுள்ளனர். அங்குள்ள இயற்கை அம்சங்கள் பேணப்பட்டு அதன் எழில் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்தப்படும் போது கௌதாரிமுனை அபிவிருத்தி அடைவதோடு மக்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடையும்,
எனவே அங்குள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் குறிப்பாக அங்கிருந்து வெளியே மணல் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்படுவதோடு, சிறியளவில் இடம்பெறுகின்ற பனைமரங்கள் வெட்டப்படுகின்ற நடவடிக்கைகளும் நிறுத்தப்படல் வேண்டும் எனவும் கோருகின்றனர் மக்கள்.
எனவே இயற்கையும், தொன்மையும், நிறைந்த பிரதேசத்தினை அதன் பாதிப்பிலிருந்து மீட்கவேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் சார்ந்த விடயம். கௌதாரிமுனையின் இலங்கையின் குறிப்பாக வடக்கின் ஒரு முக்கியமான முதுசம்.
Spread the love