இந்திய பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாதக தெரிவித்து மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது ஏன் என காவற்துறையிடம் மும்பை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தமை தொடர்பில் மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் டெல்லியில் கைதான ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ‘ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்’ என மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்ததனை அடுத்து, வரவர ரா கைது செய்யப்பட்டார்.
இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் ஆகிய 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், சட்டத்தரணியுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அத்துடன் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா காவல் துறை கூடுதல் தலைவர், வழக்கு தொடர்பான எல்லா தகவல்கள் மற்றும் ஆவணங்களை ஊடகங்களிடம் வெளியிட்டார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், காவற்துறையினல் செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.