குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.மாவட்டத்தில் 2900 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் 50 வீதத்தை அரசாங்கம் செலுத்தும். என கூறப்பட்டுள்ளது.
ஆனால் அது குறித்து தாம் தேடிப் பார்த்தபோது சுமார் 100 பேர் வரையிலேயே கண்டறியப்பட்டார்கள். அவர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் பல இடர்பாடுகள் உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக யாரும் வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள் இல்லை. மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்ககூடிய நிறுவனங்களும் இங்கு போதுமானதாக இல்லை. எனவே இந்த விடயத்திலும் விசேடமான கவனம் செலுத்தப்படவேண்டும் என மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் நிதிக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிதிக் குழுவின் மீளாய்வுக் கூட்டத்தில், நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துக் கூறுகையில், முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தால் அந்த நிறுவனம் முன்னாள் போராளிகளுக்கு கொடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற விடயத்தை நாங்கள் ஆதரித்தோம். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் மாற்று யோசனை என்ன? என கேள்வி எழுப்பினார்.
இதன்போது கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், முன்னாள் போராளிகள் தொடர்பாக பிரதேச செயலகங்களில் உள்ள தரவுகள் சரியானவை அல்ல. பிரதேச செயலகங்களில் உள்ள தரவுகளை வைத்து முன்னாள் போராளிகளை தேடியபோது அங்கே அவர்கள் இல்லை. காரணம் அவர்கள் வேறு இடங்களில் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த தரவுகள் மீளாய்வு செய்யப்படவேண்டும் என கூறினார். இதற்கமைய முன்னாள் போராளிகளின் தரவுகளை மீளாய்வு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.