ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் இறுதியாக நடைபெற்றிருந்தன.
இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் புர்ஹான் வானி என்னும் தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதனால் ஏற்பட்ட கலவரம், வன்முறைகளினால் ஒத்தவைக்கப்பட்டது.
தற்போது, அங்கு இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் முதல் திகதி முதல் ஐந்தாம் திகதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் திகதி முதல் பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளன. இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை இன்று வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள்மீது முன்னரும் திணிக்கப்பட்ட இதுபோன்ற தேர்தல்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மீதான டெல்லியின் பிடியையும் அதிகாரத்தையும் பலப்படுத்துவதற்குதான் துணை புரிந்துள்ளன. எனவே, இந்த தேர்தல்களை நாம் புறக்கணிக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.