குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று காலை முதல் வடமாகாண ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் சாலை பணியாளர்களும் இன்று செவ்வாய்க்கிழமை(4) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக ‘அடிப்படை சம்பளத்தினை 27,500 ரூபாவாக உயர்த்து’ , ‘மேலதிக சம்பளமான 10,000 ரூபாவை அடிப்படை சம்பளத்துடன் சேர்’ , ’03ஃ2006 சுற்று நிறுபத்தின் படி சம்பளத்தை அதிகரி’, ‘கல்வித்தகமைக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வை வழங்கு’ , ‘ஒப்பந்த அடிப்படை ஊழியர்களுக்கு நிரந்தர பதவியை வழங்கு’ , ‘சாரதி மற்றும் காப்பாளரின் கைவிரல் அடையாள பதிவினை இரத்துச்செய்’ ,’உயர்ந்த போக்குவரத்து தண்டத்தை இரத்துச் செய்’, சீரான போக்குவரத்து சேவையை செயற்படுத்துவதற்கு புதிய பஸ்களையும் சாரதி காப்பாளர்களையும் தந்துதவு உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை முன்வை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தூர இடங்களில் இருந்தும், கிராம பகுதிகளில் இருந்தும் மன்னார் நகருக்கு வந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டனர்.மேலும் பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது