குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
மன்னார் சின்னக்கடை தெற்கு வயல் வீதி பகுதியில் உள்ள வீட்டினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (4.9.18) உட்புகுந்த முதலையினை அப்பகுதி மக்கள் இணைந்து பிடித்து கட்டியுள்ளனர். மன்னார் சின்னக்கடை தெற்கு வயல் வீதியில் புணரமைப்பு செய்யப்பட்ட குளம் உள்ளது. இந்தக் குளத்தில் அதிகலவான தாமரை காணப்படுகின்ற அதேவேளை குளத்தில் முதலைகள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த குளத்தில் காணப்பட்ட முதலை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (4.9.18) இரவு 11 மணியளவில் குளத்தில் இருந்து வெளியில் வந்து அருகில் உள்ள வீட்டினுள் செல்ல முயன்றுள்ளது.
இதன் போது முதலையை அவதானித்த அப்பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்கள் கத்தியுள்ளன. இந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்று பார்த்த போது வீட்டு வாசலில் சுமார் 5 அடி நீளம் கொண்ட முதலை காணப்பட்ட நிலையில் அதனைப் பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை (5.09.18) அதிகாலை 1 மணியளவில் குறித்த முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டு மன்னார் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மன்னார் நகர் பகுதியில் உள்ள குளங்களில் இருந்து முதலை வெளியில் வருகின்றமை குறித்த மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.