பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களின் நலன்கருதி புதிய அன்னதான மடம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ கண்ணன் அன்னதான மடாலயம் என்ற பெயரில் இப்புதிய மடம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
கடந்த யுத்த காலத்தில் கடற்படையினரின் சூனியப் பிரதேசமாக்கப்பட்டிருந்த பொன்னாலையில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் பொன்னாலை வரதராஜப் பெருமாளைத் தரிசிக்க வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வருடாந்த ஆவணி மகோற்சவ காலத்திலும், தேர்த் திருவிழாவுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரதராஜப் பெருமாளைத் தரிசிக்க வருகை தருகின்றனர். ஏற்கனவே இங்குள்ள கண்ணன் மடாலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது ஸ்ரீ கண்ணன் அன்னதான மடாலயம் என்ற பெயரில் புதிதாக அன்னதானம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலை – மூளாய் பிரதான வீதியில், ஆலயக் காணியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த அன்னதான மடத்தில் இம்முறை நான்காயிரம் வரையான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.