கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் புயல் ஜப்பானை தாக்கியுள்ளது, அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முன்னதாகவே அங்கு 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெள்யாகியுள்ளது.
ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் ‘ஜெபி’ என பெயரிடப்பட்டுள்ள புயல் கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசியது. பலத்த மழையும் பெய்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய கடும் புயல் காரணமாக மத்திய இஷிகவா, ஒசாகா, நகோயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தில், 11 பேர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள்ளாகவே அந்நாட்டின் வடக்கு பகுடியில் அமைந்துள்ள ஒக்கைடோ தீவில் கடல்மட்டத்திற்கு கீழே 39 கிமீ ஆழத்தில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.