வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றது.
நாரதர் சிவபெருமானுக்கும் , உமாதேவியாருக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க , முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் , பிள்ளையாருக்கும் , முருகனுக்கும் கூறினார்கள்.
உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றி வர சென்ற போது , பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.
உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்து பழனி மலையில் போய் அமர்ந்தார். எனும் புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.
இன்றைய மாம்பழ திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.