இஸ்ரேலுக்கான பராகுவே தூதரகம் ஜெருசலேமில் இருந்து மீண்டும் டெல் அவிவ் நகருக்கு மாற்றப்படும் என அந்நாடு அறிவித்தமையை அடுத்து அந்நாட்டுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமைக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
எனினும் இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை திறந்ததனையடுத்து பராகுவேயும் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை திறந்தது. ஆனால் அங்கு தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளநிலையில் ஜெருசலேமில் திறக்கப்பட்ட பராகுவே நாட்டு தூதரகத்தை மூடிவிட்டு மீண்டும் டெல் அவிவ் நகரில் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தமுடிவானது இஸ்ரேலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பராகுவே நாட்டில் இயங்கி வரும் தங்களது தூதரகம் மூடப்படும் என அறிவித்துள்ளது.