பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்ததனையடுத்து , பல்வேறு பெயர்களில் செயல்படும் இந்து பயங்கரவாத அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டுமென எழுத்தாளர்கள் ஆளுனரிடம் மனு கையளித்துள்ளனர். . அவருடைய நினைவு நாளையொட்டி, கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அந்த அறக்கட்டளை சார்பில் ஆளுனா வஜூபாய் வாலாவுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த நபர் உள்பட பலரை கைது செய்து உள்ளன. இவர்கள் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் சனதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்புகளால் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுள்ளனர்.
இவர்கள் தான் முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கலபுரகி ஆகியோரையும் படுகொலை செய்துள்ளனர். இந்த அமைப்பினர் வௌ;வேறு பெயர்களில் செயல்பட்டு வருங்காலத்தில் மேலும் படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
எனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது