குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது நேற்று வியாழக்கிழமை(6) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று (7) வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவர் பிரசவித்த குழந்தை இறந்துள்ளதனையடுத்து அவரது கணவரும் உறவினரும் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியையும் ,பாதுகாப்பு உத்தியோகஸ்தரையும் தாக்கியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து குறித்த இருவரையும் உடனடியாக மன்னார் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான வைத்திய அதிகாரி மற்றும் மகப்போற்று வைத்திய நிபுணர் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை(6) இரவு குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை என எழுத்து மூலமாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளனர்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை(7) 2 ஆவது நாளாகவும் வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்ந்து இடம் பெற்ற நிலையில் மன்னார் பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது வைத்தியர்கள்,வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டதோடு,மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தமது தாய் சங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தாங்கள் குறித்த பணிப்பகிஸ்கரிப்பை தொடர்வதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதே வேளை குறித்த வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பை சுமூகமான ஒரு நிலமைக்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தையை தாம் மேற்கொண்டு வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
எனினும் வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், இது தொடர்பான சம்பவங்கள் இனி தொடர்ச்சியாக இடம் பெறாமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் வழியுறுத்தி வருகின்றார்கள்.
அவர்களுடைய பணிப்பகிஸ்கரிப்பை நீடித்துள்ளார்கள்.எனினும் பகிஸ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.