180
இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அக் காலப் பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார். அத்துடன் இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிப் போரின்போது 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய சரத்பொன்சேகா இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
இறுதிப் போரில் 40,000 பேர் கொல்லப்படவில்லை எனவும், 7,000 அல்லது 8,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இதில் நான்கில் ஒரு வீதம் விடுதலைப் புலிகள் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள்?
”விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 23 ஆயிரம் உறுப்பினர்களை இலங்கை இராணுவம் கொன்றது. மேலும் 12,000 பேரைக் கைது செய்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் ஒன்று இறுதிப் போர் நடந்த போது சேவையில் ஈடுபட்டிருந்தது. பாதிக்கப்படுவோரை இராணுவத்தின் பக்கம் கொண்டுவர அந்தக் கப்பல் பயன்பட்டது. போரின் இறுதி இரண்டு வாரங்களைத் தவிர அந்த கப்பல் சேவை தொடர்ந்து இயங்கியது. அதனால், 30 – 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை. புதுகுடியிருப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட குறுகிய பிரதேசத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால் அந்தப் பிரதேசத்தில் எந்தவொரு இடத்தில் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்தினாலும், கொல்லப்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் இருக்க வேண்டும்”
”4,000 முதல் 5,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். காரணம், விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளில் பொதுமக்களே கடமையில் இருந்தனர். இறுதிப் போரில் ஒரு பெண்ணைக் கைது செய்திருந்தோம். அவர் ஓர் ஆசிரியை. ஆசிரியையுடன் மாணவர்களுக்கும் ஆயுதங்களை வழங்கி பதுங்கு குழிகளில் கடமைக்காக அமர்த்தியுள்ளனர். எனவே, பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம்”
”அப்படி 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால், இராணுவம் முன்நோக்கிச் செல்ல தடையாக இருந்திருக்கும். இறந்தவர்களின் உடல்களை அகற்ற இராணுவம் இன்னுமொரு படைப் பிரிவை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். எனினும், அப்படியொரு நிலை ஏற்படவில்லை. 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது பொய்யான தகவல்”
எந்தக் காலப்பகுதியில் இந்த 23,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்?
”இறுதிப் போரில்தான் இந்த 23,000 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 உறுப்பினர்கள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக்கிடைத்தது. போர் நடந்த போது நாள்தோறும் புலிகளுக்கு ஏற்படும் இழப்புகளை இராணுவம் அலைவரித் தகவல்களை அனுப்பிவைத்தனர். இதன்மூலம் தான் இந்த எண்ணிக்கை உறுதியானது. இறுதிப் போர் நடந்த 2 வருடங்கள், 9 மாதங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன”
பதுங்கு குழிகளில் ஆசிரியை உள்ளிட்ட பொதுமக்கள் இருந்ததாகக் கூறுனீர்கள்! அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களா? அல்லது பயிற்சியின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனரா?
”பதுங்கு குழிகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களு க்கு குறுகிய கால ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. வயோதிக தாய், தந்தையருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதைப் போன்ற புகைப்படங்கள் அக்காலத்தில் பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதேபோன்று பயிற்சிகள் வழங்கப்பட்டவர்களே இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தனர். ஆயுதத்தைப் பயன்படுத்தத் தெரியாத, கண்கள், காதுகள் சரிவர இயங்கும் ஒருவரை அவர்கள் பதுங்கு குழியில் கடமையில் ஈடுபடுத்தியிருந்தாலும், அவர்களுக்குப் பாதுகாப்பிற்கு ஆளணி பலம் கிடைத்திருக்கும். இவ்வாறு இறுதிப் போரில் அனைவரையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்”
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் உள்ளிட்டவர்களும் முன்னிலை பதுங்கு குழிகளில் இருந்து போர் செய்து இறுதி நேரத்தில் மாண்டதாகவே எமக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. எனவே அனைவரையும் அவர்கள் போரில் ஈடுபடுத்தியதாகவே நான் கருதுகிறேன்.”
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் போரின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஏதாவது நீங்கள் அறிந்துள்ளீர்களா? இவற்றில் நம்பகத் தன்மை இருக்கிறதா?
”இவற்றை நம்ப நான் தயாரில்லை. இறுதிப் போரின் போது முஸ்லிம் தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்ததற்கான எவ்வித தடயங்களும் இருக்கவில்லை. முஸ்லிம்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என நான் நினைக்கவில்லை. முஸ்லிம் மக்களை பொதுவாக எடுத்துக் கொண்டால், இன்றும் அவ்வாறான மனநிலையில் அவர்கள் இல்லை. இதனை நான் ஏற்கமாட்டேன். விடுதலைப் புலிகள் மட்டுமே அந்நேரத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்றே நான் கருதுகிறேன்.”
இறுதிப் போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றே போரை வழிநடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச கூறி வருகிறார். எனினும், இராணுவத்திற்குத் தலைமைதாங்கிய அந்நாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா ”ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்” எனக் கூறுகிறார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்கள் அடுத்த ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பேசுபொருளாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Spread the love