வன்னி மாவட்டத்திலும் வீடு இல்லை என்ற பிரச்சினையை நிச்சயம் தீர்த்து வைப்பேன் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் நேற்று வெள்ளிக்கிழமை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட சிவாநகர் மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் குறிப்பிட்டார்.
வன்னி மக்களுக்கு வீடில்லை என்ற குறையினைத் தீர்த்து அவர்களின் கண்ணீரைத் துடைக்கவேண்டும் என்பதே தமது நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர் ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கவேண்டும் அவர்களிற்கு வீடு இல்லை என்ற பிரச்சினையை முற்றாகக் குறைத்து அவர்களிற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வட மாகாண புண்ணிய பூமியிலே வீடு இல்லை என்ற குறையை தான் நிச்சயமாக மாற்றிகாட்டுவதாக கூறிய அவர் வட.மாகாணத்தைப் பொறுத்தவரையில் 257 மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 81 மாதிரிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் வவுனியா மாவட்ட மாதிரிக் கிராமங்களை 150 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மக்களுடைய நம்பிக்கை, அனுசரணை, ஒத்துழைப்பு, எப்பொழுதும் வேண்டும் எனக் கூறிய அவர் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் அனைத்து விடயங்களும் தடைப்படும்நிலை என்றும் கூறியதுடன் முன்னாள் ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாச எப்படியான சேவையை செய்தாரோ அதேபோன்று அனைவருக்கும் அவரது மகனாக தொடர்ந்து சேவை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.