ஜெனிவாவில் நடைபெற்ற ஏமன் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் மறுத்து விட்டதால் ஐ.நா.சபையின் இந்த முயற்சி இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கெதிராக அரசுடன் இணைந்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர் தாக்குதல மேற்கொண்டு வருகின்றன.
இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை முயன்றது.
இதன்விளைவாக ஜெனிவாவில் கடந்த 3 நாட்களாக ஐ.நா அதிகாரி ஏமன் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். எனினும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்த நிலையில் அதனை ஏற்க ஏமன் அரசு மறுத்தமையினால் ஐ.நாவின் சமாதான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.