கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை.
கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அத்தொகை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வரை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இரவானதும் அதில் பலர் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். இரவுப் போராட்டத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரத்திற்கும் குறையாத தொகையினரே பங்குபற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, விசேட உச்சநீதிமன்றம் போன்றவற்றை அவர்கள் முற்றுகையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அன்றைய இரவை உறங்கா இரவாக மாற்றப்போவதாக மகிந்த அணி அறிவித்திருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போதையில் தடுமாறும் காட்சிகளும், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டன.
இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் தன்னியல்பாக நடப்பது குறைவு. மனோகணேசன் கூறுவது போல இது ‘அரப் ஸ்பிரிங்’ அல்ல. அரப் ஸ்பிரிங்கில் கூட மேற்கத்தைய முகவர்கள் பின்னணியில் இருந்தார்கள். எனவே செல்பி யுகத்தில் தன்னியல்பான எழுச்சிகள் என்று கூறப்படும் பல ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே கிராம மட்டத்திற் காணப்படும் கட்சி வலைக்கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டவைதான். எத்தனை பேரைத் திரட்டுவது? எப்படித் திரட்டுவது? யார் திரட்டுவது? எப்படி ஒரு மையமான இடத்திற்கு கொண்டு வருவது? வாகன ஒழுங்குகளை யார் செய்வது? சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது? போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா? மதுவைக் கொடுப்பதா? அல்லது வேறெதைக் கொடுப்பதா? போன்றவையும் நன்கு திட்டமிடப்படுகிறது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு பட்ஜட் இருக்கும். எவ்வளவு பேரைத்திரட்டுவது என்பதையும் பட்ஜட்டே தீர்மானிக்கின்றது.
மகிந்தவுக்கு ஆதரமான மக்கள் திரள் எனப்படுவது அதன் முதலாவது பொருளில் யுத்த வெற்றிவாதத்திற்கு ஆதரவானதுதான். யுத்தவெற்றிவாதம் எனப்படுவது இனவாதத்தின் 2009ற்குப் பிந்திய வடிவம்தான். எனவே மகிந்தவிற்காகச் சேரும் கூட்டமென்பது அதிகபட்சம் இனவாதத்திற்காகச் சேரும் கூட்டம்தான். அதை மகிந்ததான் திரட்ட வேண்டும் என்றில்லை. அது ஏற்கெனவே நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்றுதான். இலங்கைத்தீவின் இனவாதமென்பது கடந்த பல நூற்றாண்டுகளாக நன்கு நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கூட்டு உளவியலாகும். மகாசங்கம், யாப்பு, நாடாளுமன்றம், கட்சிகள், நீதிபரிபாலனக் கட்டமைப்பு, படைக்கட்டமைப்பு, அதிகாரப்படிநிலைக் கட்டமைப்பு, நிர்வாகக்கட்டமைப்பு, ஊடகக்கட்டமைப்பு என்று பல்வேறு கட்டமைப்புக்களிற்கூடாகவும் பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு கூட்டு உளவியல் அது. மகிந்த அதற்குத் தலைமை தாங்குகிறார். எனினும் கடந்த புதன்கிழமை அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கிடையே நிலவும் வாரிசுப் போட்டியே காரணமென்று கருதப்படுகிறது.
புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியது நாமல் ராஜபக்ஷ. அவரை எதிர்காலத்தில் தலைவராக ஸ்தாபிப்பதற்கு உரிய அடித்தளத்தை உருவாக்குவதும் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு நோக்கம்தான். ராஜபக்ஷ குடும்பத்தில் யுத்தக் குற்றச்சாட்டிற்கு இலக்காகமுடியாத வாரிசுகளில் ஒருவர் நாமல். மற்றவர் பசில். கடந்த மே நாள் கொண்டாட்டத்தை பசிலே ஒழுங்குபடுத்தினார். அது அவருடைய ஒழுங்குபடுத்தும் திறனுக்கு ஒரு சான்றாகக் காட்டப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் நாமலுக்கு பெரு வெற்றியாக அமையவில் 19ஆவது சட்டத் திருத்தத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வயதை அடையும் வரை நாமல் போட்டியிட முடியாது. எனினும் எதிர்காலத் தலைமைத்துவத்திற்கு மகிந்த தன் வாரிசைத் தயார்ப்படுத்துகிறார்.
எதுவாயினும் மகிந்தவின் ஆர்ப்பாட்டம் அரசாங்கம் பயந்த அளவிற்கு பிரமாண்டமாகவோ அல்லது உக்கிரமாகவோ அமையவில்லை. ஆனால் அதற்காக மகிந்த ஆதரவு அலை ஓயத் தொடங்கிவிட்டது என்று கருத முடியாது. ஆர்ப்பாட்டத்திற் கலந்து கொள்ளாதவர்கள் தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வராதவர்கள் வாக்களிப்பதைப் போல. இவ்வாறு மகிந்த ஓர் ஆண்டுக்குள்ளேயே மூன்று தடவை தன் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை என்ன?
வருமாண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலும் ஆண்டின் இறுதியில் அரசுத்தலைவருக்கான தேர்தலும் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தரும், சுமந்திரனும் நம்புவது போல ஒரு புதிய யாப்பு உருவாக்கப்பட்டால் வருமாண்டில் அரசுத்தலைவருக்கான தேர்தலைப்பற்றி அஞ்சத்தேவையில்லை. ஆனால் மனோகணேசன் கூறுவது போல யாப்பு மாற்றப்படவில்லையென்றால் மகிந்;த அணி அத்தேர்தலின் மூலம் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும். அது இச்சிறிய தீவில் இப்போதுள்ள வலுச்சமநிலையை மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் இப்போதுள்ள வலுச்சமநிலையையும் மாற்றிவிடக்கூடும். அது உலகப்பரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே வருமாண்டு ஒரு தேர்தலாண்டாக இருக்கலாம் என்ற ஓர் எதிர்ப்பார்ப்பின் பின்னணியில் மகிந்த இந்த ஆண்டு மூன்றாவது தடவையாக தனது பராக்கிரமத்தைக் காட்ட முற்பட்டார். அதுமட்டுமல்ல வாற கிழமை புதுடில்லியில்; மகிந்தவும் உட்பட ஏனைய எல்லாக்கட்சித் தலைவர்களும் வௌ;வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவிருக்கிறார்கள். மகிந்த சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் போகிறார். ஏனைய கட்சித் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் போகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே காலப்பகுதியில் புதுடில்லியில் தங்கியிருப்பார்கள். இவர்களை இந்திய அரசின் பிரதானிகளும் அதிகாரிகளும் சந்திக்கவிருக்கிறார்கள். இப்படியொரு பின்னணிக்குள்ளும் மகிந்த தனது பலத்தைக் காட்ட முற்பட்டிருக்கிறார்.
அரசியலில் ஒரு தரப்பு தனது பலத்தை எதிரிக்கு எப்பொழுது காட்டலாம்? எப்பொழுது காட்டக்கூடாது? இக்கேள்விக்குப் பதில் காண்பதென்றால் மகிந்த யார் யாருக்குத் தனது பலத்தைக் காட்ட முற்படுகிறார் என்று பார்க்க வேண்டும். முதலாவதாக ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு இரண்டாவதாக இந்தக் கூட்டரசாங்கத்தைப் பின்னிருந்து ஆதரிக்கும் மேற்கு நாடுகளுக்கு. மூன்றாவதாக இந்தியாவிற்கு.
இவ்வாறு தனது பலத்தைக் காட்டுவதன் மூலம் இப்பிராந்தியத்தில் தான் ஓர் இன்றியமையாத தலைவர் என்ற செய்தியை மேற்படி தரப்புக்களுக்கு மகிந்த உணர்த்த முற்படுகிறார். யாப்பை மாற்றுவதும் மாற்றாமல் விடுவதும் கூட தனது கையில்தான் இருக்கிறது என்பதை அவர் காட்ட முற்படுகிறார். யாப்பை மாற்றாவிட்டால் அடுத்த அரசுத்தலைவருக்கான தேர்தலில் தனது அணி வெற்றி பெறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் மேற்படி தரப்புக்களுக்கு உணர்த்த முற்படுகிறார். இது எவ்வாறான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்?
மகிந்த தொடர்ந்தும் பலமாக இருந்தால் அது சீனாவுக்கு உற்சாகமூட்டும் ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அது அச்சத்தையும், எரிச்சலையும் கொடுக்கும். கோத்தபாய அடுத்த அரசுத்தலைவராக வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்தூதுவர் மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இந்நிலையில் மகிந்த அணி மேலும் மேலும் தனது பலத்தைக் காட்ட முற்படுவதை அமெரிக்கா, எப்படிப் பார்க்கும்? இந்தியா எப்படிப் பார்க்கும்? நிச்சயமாக அவர்கள் மகிந்தவின் மீள் வருகையைத் தடுக்கவே முயற்சிப்பார்கள். அதற்கு எல்லாவிதமான வழிவகைகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். 2015ல் மகிந்தவைக் கவிழ்க்க அவர்கள் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தினார்களோ அப்படியே இப்பொழுதும் யோசிப்பார்கள். தமக்கு விசுவாசமான ரணில் – மைத்திரி அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்க முயற்சிப்பார்கள்.
இது மகிந்தவுக்கும் தெரியும். முப்பெரும் வல்லரசுகள் மோதும் ஒரு ஆடுகளத்தில் தானும் ஒரு துருப்புச்சீட்டு என்பது அவருக்கு நன்கு தெரியும். அவருடைய இந்திய விஜயத்தி;ன்போது இது அவருக்கு உணர்த்தப்படும். எனினும் அவர் ஏன் திரும்பத் திரும்ப தனது பலத்தைக் காட்டப்பார்க்கிறார்? தனக்கு எதிராக உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும் உலக அளவிலும் காய்கள் நகர்த்தப்படும் என்று நன்கு தெரிந்திருந்தும் அவர் ஏனிப்படிச் செய்கிறார்?
மக்கள்சக்தி எனப்படுவது அரசியலில் ஒரு கவர்ச்சியான தோற்றப்பாடுதான். ஜனநாயக அரசியலில் அது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பிரதான தோற்றப்பாடாகும். ஆனால் சிறியநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் பெரிய நாடுகள் மக்கள் சக்தியைப் பொருட்படுத்தாது முடிவெடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. மக்கள் ஆணையைப் பெற்ற ஜனவசியம் மிக்க, பல தலைவர்கள் அவர்களைத் தெரிந்தெடுத்த மக்களின் பெருவிருப்பங்களுக்கு மாறாக கவிழ்க்கப்பட்டிருக்கிறார்கள். சூதான சதிகள் மூலம் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். பேரரசுகள் தமது பிராந்திய மற்றும் உலகளாவிய வியூகத் தேவைகளுக்காக சிறிய பலங்குன்றிய நாடுகளின் தலைவர்களைக் கவிழ்த்த பல முன்னுதாரணங்கள் உண்டு. குறிப்பாக பேரரசுகளின் இழுவிசைக்களத்தில் அமைந்திருக்கும் இலங்கைத்தீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் யார் என்பதைப் பேரரசுகளே பெரிதும் தீர்மானிக்கின்றன. அப்படித்தான் மகிந்தவும் கவிழ்க்கப்பட்டார். ரணில் – மைத்திரி ஆட்சி உருவாக்கப்பட்டது. அண்மையில் பாகிஸ்தானிலும் இதுதான் நடந்தது. இம்ரான் கானைத்தான் மக்கள் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை படைத்தரப்பே தீர்மானித்தது. படைத்தரப்பு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை வெளித்தரப்புக்கள் தீர்மானித்தன.
எனவே மகிந்த நம்புவது போல அவருக்குப் பின்னாலுள்ள மக்கள் பலத்தைக் கண்டு பேரரசுகள் பயப்படும் என்பதற்கும் அப்பால், அவை அவருடைய மீள்வருகையைத் தடுக்கும் விதத்தில் தற்காப்பு மற்றும் முற்தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கக் கூடுமென்பதே இப்போதுள்ள இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். இவ்வாறு மேற்படி நாடுகள் முற்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மகிந்த நம்வுவது போல நிலமைகள் தொடர்ந்தும் இப்படியே இருக்கும் என்பதல்ல. அரசாங்கம் சிலவேளை தேர்தல்களை ஒத்தி வைக்கலாம். அல்லது புதிதாகச் சட்டங்களை இயற்றி மகிந்த அணியை தொடர்ந்து முன்னேற விடாமல் தடுக்கலாம்.
உதாரணமாக இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் அப்பிரஜாவுரிமையை போட்டியிடுவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துறக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை உருவாக்குவது பற்றி அரசாங்கம் சிந்திக்கின்றது. இது கோத்தபாய, பசில் போன்றவர்களை முடக்கும் ஒரு நடவடிக்கை. அரசாங்கம் மட்டுமல்ல மேற்கு நாடுகளும் இந்தியாவும் கூட முற்தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தும். மகிந்த எவ்வளவிற்கு எவ்வளவு பலத்தைக் காட்டுகிறாரோ அவ்வளவிற்கு அவ்வளவு முற்தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும். ஆயின் தனது பலத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் மகிந்த தன்னை விரும்பாத தரப்புக்களை உசாரடைய வைக்கிறாரா? இது அவருக்கு விளங்காதா?
விளங்கும். ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ளவும் வரவிருக்கும் தேர்தல்களை எதிர் கொள்ளவும் அவருக்குள்ள ஒரே வழி இதுதான். அவருடைய ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளால் அவருடைய அணியின் வெளிவட்டம், உள்வெளிவட்டம் என்று கருதப்படும் பலர் விசாரிக்கப்பட்டு விட்டார்கள். அவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் கூட விசாரணைகளை எதிர்நோக்குகிறார்கள். இதை இப்படியே விட்டால் அது தனது குடும்பத்தைச் சுற்றிவளைத்துவிடும் என்பது மகிந்தவிற்குத் தெரிகிறது. உள்நாட்டில் சட்டநடவடிக்கை என்ற கூரான வாள் அவருடைய குடும்பத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட அவருக்குள்ள ஒரே வழி தனக்குள்ள மக்கள் பலத்தைக் காட்டி அரசாங்கத்தை மிரட்டுவதுதான். அதைத்தான் அவர் இப்பொழுது செய்கிறார்;. ஆனால் அரசாங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்காக அவர் கடந்த புதன்கிழமை திறந்த ஓர் புதிய போர்அரங்கு அவரையே அதிகரித்த அளவு தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறதா?