ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு, 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தென் ஆபிரிக்க முன்னாள் வீரர் டீ வில்லியர்ஸை நியமிக்க பெங்களூரு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வெல்லக்கூடிய தகுதி படைத்த அணிகளாகக் கருதப்பட்ட பெங்களூரு அணி 3 முறை இறுதிப்போட்டி வரை சென்றும் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
இதையடுத்து பெங்களூரு அணியில் புதிய மாற்றங்களை உண்டாக்கும் நோக்கிலும், அடுத்த ஆண்டு பருவகாலத்தில் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கிலும் அண்மையில் பல மாற்றங்களை அணி நிர்வாகம் செய்திருந்தது. அந்தவகையில் தலைமைப் பயிற்சியாளரான இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி நீக்கப்பட்டு ஹரி கிரிஸ்டன் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணியின் தலைவராக இருந்து வரும் விராட் கோலி தலைமையில் 2016-ம் ஆண்டு மட்டுமே பெங்களூரு அணி இறுதிப்போட்டி வரை சென்றது.இதனால் அடுத்த பருவகாலப் போட்டிக்கு டி வில்லியர்ஸை தலைவராக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து பெங்களூரு அணி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும் ஊடகங்களில் வெளியான செய்தியை இதுவரை பெங்களூரு அணி நிர்வாகம் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது