மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் பகுதியில் 1990ஆம் ஆண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில் நடைபெற்றது. சத்துருக் கொண்டான் இனப்படுகொலை நினைவிடத்திலும் பிரத்தியேக இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1990ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதி, சத்துருக் கொண்டானில் இலங்கை இராணுவம் மற்றும் ஊர்காவற்படையினர் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலையில் 184பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை எரியும் ரயர்களில் வீசி இலங்கை இராணுவத்தினர் கொடூரச் செயல்களில் ஈடுபட்டனர்.
47 குழந்தைகள். 85 பெண்கள். 28 முதியவர்கள் என 184 பேர் காவு கொள்ளப்பட்ட இந்தப் படுகொலையை மக்கள் தொடர்ந்து நினைவுகூர்ந்து வருகின்றனர். இன்று சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற நினைவேந்தலில் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.