Home இலங்கை தமிழர் தாயகம் என்பது கட்டுக்கதையல்ல!பரிநிர்வாணம் எய்திய புத்த பெருமான் காலத்தை முந்தியது…

தமிழர் தாயகம் என்பது கட்டுக்கதையல்ல!பரிநிர்வாணம் எய்திய புத்த பெருமான் காலத்தை முந்தியது…

by admin

சிலோன் ருடே பத்திரிகைக்கு
ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டவர் திருமதி சுலோசனா மோகன் – தமிழாக்கம்


1. கேள்வி – உங்கள் முதலமைச்சர் பதவிக்காலம் விரைவில் முடிவடையவிருக்கின்றது. முதலமைச்சர் என்ற வகையில் இது வரையான உங்கள் நடவடிக்கைகள் மகிழ்வையும் நிறைவையுந் தந்துள்ளனவா? நிறைவடையாத சவால்கள் உள்ளனவா?

பதில் – சிரமமான சூழலில் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன் என்பது நிறைவைத் தருகின்றது. என் முன்னால் பல தடைகள் வைக்கப்பட்டிருந்தன. எனினும் அவற்றை என் மக்களின் ஆதரவுடன் முறியடிக்கக் கூடியதாய் இருந்தது. எம் மக்கள், முக்கியமாக எம் இளையோர், என் மீது அன்பு பாராட்டி வந்தமை எனக்குத் தெரியாமல் இருந்தது. நான் ஒரு வெளி மனிதர் என்ற முறையில்த்தான் இங்கு வந்தேன். எனினும் மக்கள் என்னை அவர்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். என் நன்றிக்கான பதில்க் கடமைகள் நான் ஆற்ற வேண்டியுள்ளது. பலவிதமான அரசியல், சமூக, பொருளாதார சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எமது உறுப்பினர்கள் உதவிக்கு வருவார்களானால் எம்மால் பலதையுஞ் சாதிக்க முடியும். கட்சி அரசியல் எம்மிடையே இருக்கும் சுமூக நிலையைச் சீர்கெடுக்க விடக் கூடாது.

2. கேள்வி – அரசியலில் நீங்கள் தொடர்ந்து இருக்காவிட்டால் தமிழ்த் தாயகம், தமிழரின் தாகம் ஆகியன திசைமாறிவிடுவன என்று பயப்படுகின்றீர்களா?

பதில் – தமிழர் தாயகம் என்பது கட்டுக்கதையல்ல. அது முற்றிலும் உண்மையான கருத்து. பரிநிர்வாணம் எய்திய புத்த பெருமான் காலத்திற்கு முன்பிருந்தே திராவிடர்கள் இந் நாட்டின் கரையோரங்களில் குடியிருந்து வந்துள்ளனர். தற்போதைய நீர்கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி வன்னி வரை சென்று கிழக்கில் திருக்கோவில் வரையில் அவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களின் இருப்பு மேலும் கதிர்காமம் வரையில் பரவியிருந்தது.

சிங்கள மொழியானது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டளவில்த்தான் ஜனித்த காரணத்தினால் அதற்கு முன்னர் இந் நாட்டில் சிங்கள மக்கள் குடிகொண்டிருக்கவில்லை என்பதே எனது கருத்து. சிங்கள மொழியானது பாளி, வடமொழி, தமிழ் மற்றும் பேச்சு மொழிகளில் இருந்தே பிறந்தது.

ஆனால் எமது பாரம்பரியத்தையும் வரலாற்றையும் பகிரங்கமாக எடுத்தியம்ப வேண்டிய கட்டாயம் எமக்கு இப்போது உதித்துள்ளது. ஏன் என்றால் எம்மைப் பற்றியுந் தம்மைப்பற்றியதுமான எமது சகோதர இனத்தவர்களின் சிந்தனைகள் பிழையான கருத்துக்களாலேயே நிறைக்கப்பட்டு வந்துள்ளன. அந்த பிழையான கருத்துக்களே அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆணிவேராக அமைந்திருந்துள்ளன.
என்னைப்பொறுத்த வரையில் எமது மக்களுக்கு என்னால் முடிந்தவரையில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சேவை செய்வதே எனது கடப்பாடாகக் கருதுகின்றேன். முடிவுறா செயற்றிட்டங்கள் என்று பார்த்தால் சமூகக்கல்வி முன்னேற்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்தல், இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவர அரசியல் ரீதியான தீர்வை அடையாளங் காணுதல், பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் பொருளாதார புனர் நிர்மாணத்தையும் அபிவிருத்தியையும் உறுதி செய்தல் போன்ற பலவற்றை அவை உள்ளடக்கி நிற்பன. இவற்றை அடைய நாம் இதுகாறும் முனைந்தோமெனினும் மேலும் அடைய வேண்டிய இலக்குகள் பல உண்டு.
3. கேள்வி – அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் நீங்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் பிரிந்துள்ளீர்கள். இது யாவரும் அறிந்ததே. பிரிவை ஏற்படுத்தியது எது அல்லது என்ன?

பதில் – நான் பிரிவு என்று அதனைக் கூற மாட்டேன். எமது அரசியல் ரீதியான பார்வைகள் வித்தியாசப்பட்டுள்ளன என்பதே உண்மை. சிங்களவரிடம் இருந்து பெறக்கூடியதை சுருட்டிக் கொண்டு வாழ்வதே உசிதம் என ஒரு சாரார் நினைக்கின்றார்கள். இவ்வாறான சிந்தனையும் செயற்பாடும் எமது மக்களின் அடையாளங்களை நிச்சயமாகத் தொலைத்து விடுவன என்று மற்றையவர்கள் அஞ்சுகின்றார்கள். எமக்கான கலாச்சார, பிராந்திய, மதரீதியான, மொழி ரீதியான மேலும் சமூக ரீதியான தனித்துவம் எவ்வாறெனினும் பேணப்பட வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். அரசியல், தேசிய, பிராந்திய விடயங்கள் பற்றிய எமது வித்தியாசமான நோக்குகளும் நண்ணுதல்களும் நீங்கள் கூறும் பிரிவினை போன்ற நிலைக்கு வித்திட்டுள்ளதாக வேண்டுமானால் கொள்ளலாம்.

எமது வேற்றுமைகளின் தாற்பரியங்களை புரிந்து கொள்ளுதலே இணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.

உதாரணத்திற்கு அரசியல்த் தீர்வை உடனே முன்னெடுக்க வேண்டும் என்று கோருவதில் எமக்குள் ஒற்றுமை வேண்டும் என்று நான் கூறியது அரசியல் தீர்வைத் துரிதப்படுத்தவே. பாரிய பொருளாதார செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் நாம் அக்கறை காட்டத் தொடங்கினால் எமது அரசியல் தீர்வு தடம்பெயர்ந்து போய்விடும்;. அப்போது தொடர்ந்து வரும் (பெரும்பான்மையினர்) அரசாங்கங்கள் வடமாகாணத்தில் குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்குதலையும் துரிதப்படுத்தி வடக்கையுந் தெற்கையும் ஒன்று சேர்த்து ஒருமைப்படுத்தி எமது காணிகள், வியாபாரங்கள் போன்றவற்றைக் கபளீகரம் செய்து விடுவார்கள்.

எனினும் வேண்டுமென்றே எனது கூற்று திரிவுபடுத்தப்பட்டு பொருளாதார அபிவிருத்திக்கு நான் எதிரானவன் என்று கூறப்பட்டது. நான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை அரசாங்கம் விருத்தி செய்வதாக இருந்தால் தாராளமாக அதைச் செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்காக என்னை அவர்கள் தமது செயலணிக்குள் ஈர்க்க வேண்டியதில்லை என்றே கூறியிருந்தேன். மேலும் குறித்த செயலணியின் செயற்பாடுகள் வெளிநாட்;டு உட் கொள்ளல்களுக்காகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் கூறியிருந்தேன்.

4. கேள்வி – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு தேர்தலில் நிற்க நியமனந் தராதவிடத்து நான்கு வழிமுறைகள் இருப்பதாக நீங்கள் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அண்மையில் கூறியிருந்தீர்கள். அதாவது தேர்தலில் மீண்டும் நிற்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றீர்களா? அந்த மாற்று வழிமுறைகள் என்னென்ன?

பதில் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களுக்கு தேர்தலில் நிற்க நியமனம் வழங்காது விட்டால் நீங்கள் செய்யப்போவது என்ன என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் நான்கு மாற்று வழிமுறைகளை அடையாளம் காட்டினேன். அவற்றில் நான்காவதாக குறிப்பிடப்பட்ட வழிமுறை மிக அண்மையிலேயே அடையாளப்படுத்தப்பட்டது. வழிமுறைகள் யாவன – 1. அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது. 2. வேறொரு அரசியல் கட்சியில் சேருவது. 3. கட்சி ஒன்றை நான் ஸ்தாபிப்பது. 4. அரசியல் அபிலாசைளை அடையும் வண்ணம் ஒரு பக்கச்சார்பற்ற சமூக இயக்கத்திற்குத் தலைமை தாங்குவது.

5. கேள்வி – உங்களுக்கு மிகப் பிடித்தமானது எந்த வழிமுறை?
பதில் – நான்காவதே!

6. கேள்வி – தற்போதைய அரசியல் நிலையை அவதானிக்கும் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கீழ் நீங்கள் தேர்தலில் நிற்கக் கிடைக்காதெனின் நீங்கள் இன்னொரு கூட்டின் கீழ் போட்டியிடுவீர்கள் என்று தெரியவருகிறது. அவ்வாறு செய்வதால் வாக்குகள் பிளவுபடுவன. தனிப்பெரும்பான்மை கிடைக்காது. இதனால் பாதிக்கப்படப் போவது தமிழர் தரப்பே. அரசியல் தீர்வை எதிர்நோக்கியிருக்கும் தமிழர் தரப்புக்கு இது ஒரு பின்னடைவே. ஆகவே நீங்களே அமைப்போனாகவும் அழிப்போனாகவும் இருக்க விரும்புகின்றீர்களா?

பதில் – பொதுமக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தேவைகளை அடையாளங் கண்டு நிறைவேற்றுவதே அரசியல்ப் பதவிகளின் பொறுப்பு என்று கூறலாம். வெறுமனே பெரும்பான்மையாக ஒரு கட்சி மக்களைப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியமா அல்லது தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திடமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெறுமதியான கருத்துக்களை வெளிப்படுத்துவது முக்கியமா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்;. தனிப்பட்ட நலவுரித்துக்களைப் பெற்றுக்கொள்ள அரசியல் மௌனம் காத்து எமது பிரச்சனைகளையும் நலவுரித்துக்களையும் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க எத்தனிப்பதைத் தடுக்க வாக்குகள் பிளவுபட்டால் அதில் பிழையில்லை. சென்ற 9 வருட காலத்தினுள் கட்சி பிளவுபடாமல் இருந்து ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வை நோக்கி ஒரு அங்குலந்தானும் நாம் நகர்ந்துள்ளோமா? இராணுவம் தொடர்ந்து எம் காணிகளில் குடியிருந்து வருகின்றார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பௌத்தர்கள் எவருமே நிரந்தரமாக வாழாத இடங்களில் பௌத்த சிலைகள் வந்து கொண்டே இருக்கின்றன. எமது காணி உரித்துக்களில் மகாவெலி அதிகாரசபை தலையிடுக்கின்றது. எமக்குள்ள கொஞ்சநஞ்சமான பொலிஸ் அதிகாரங்கள் கூட எமக்கு இதுவரை தந்தபாடில்லை. இவ்வாறான பட்டியல் நீண்டு செல்கின்றது.

7. கேள்வி – தமிழ்த்தேசிய அரசியல் தலைமைத்துவத்தை பாரமெடுக்க நீங்கள் தயார் என்று கூறுகின்றீர்கள். தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வேறு நபர்களும் கோபமடைந்து நீங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக நடந்து கொள்கின்றீர்கள் என்று குற்றம் சாட்டும் போது அது எப்படி சாத்தியமாகும்?

பதில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்ட கொள்கைகள் கொண்ட அமைப்பல்ல. அது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியல்ல. அதற்கென ஒரு அரசியல் சின்னம் இல்லை. தவணைக்குத் தவணை முறையான கூட்டங்களை அது நடத்துவதுமில்லை. மக்களின் தேவைகள், அபிலாiஷகளைப் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு சிலரைக் கொண்ட குழுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வழிநடத்துகின்றது. மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை அந்தச் சிறிய குழுவே தீர்மானிக்கும். நீங்கள் குறிப்பிட்டவரும் அவரின் அடியாட்களும் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். சுயநலங் கொண்டதே அவர்கள் கரிசனை. மக்களின் பங்குபற்றல் தவிர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்த்தேசிய அரசியல்த் தலைமைத்துவத்தை நான் பொறுப்பேற்பேன் என்றோ அவ்வாறான ஒரு மனோநிலை எனக்குண்டு என்றோ நான் கூறவில்லை. நான் கூறியது என்னவென்றால் தற்போதைய தலைமைத்துவத்தின் போதாமை என்னால் உணரப்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக என்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமையை நான் உணர்கின்றேன் என்பதே.

8. கேள்வி – பாராளுமன்றஉறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உங்களுக்கு முதலமைச்சர் பதவிக்கான நியமனம் இம் முறை தரப்பட மாட்டாது என்றும் உங்களை 2013ல் அறிமுகப்படுத்தியது தவறென்றும் கூறியுள்ளார். உண்மையில் முற்றான பெரும்பான்மை வாக்குகளால் உங்களால் வெல்ல முடியும் என்று அவருக்கு நிரூபிக்க முடியுமா?

பதில் – என் மக்களை நான் சந்தித்த பின் என்னுடைய கொழும்பு சார்ந்த கருத்துக்கள் மாற்றமடைந்தன என்பது உண்மையே. அதன் காரணத்தால் மக்கள் கருத்துக்களையும் அபிலாசைகளையும் புரிந்து கொள்ளாதவர்களின் கைப்பொம்மையாகத் தொடர்ந்திருக்க முடியாது போனமையும் உண்மையே. மக்களே எனக்கு முதன்மை பெற்றவர்கள். கட்சிகள் அல்ல. எனது வருங்காலம் மக்களாலேயன்றி வேறெவராலும் தீர்மானிக்கப்பட முடியாது.

9. கேள்வி – உங்களுக்கும் சுமந்திரனுக்கும் இருக்கும் வேற்றுமைகளைக் களைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றதா?

பதில் – சந்திப்பானது எனக்கும் கௌரவ சம்பந்தனுக்கும் இடையிலானதேயன்றி எனது மாணவருக்கும் எனக்கும் இடையிலானது அல்ல. ஆனால் இம் மாதம் 7ந் திகதி சந்திப்பதாக திரு சம்பந்தன் அவர்கள் கூறிவிட்டு அதே தினத்தில் வெளிநாடு பறக்க இருக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே 7ந் திகதி சந்திப்பு சாத்தியப்படாது.

10. கேள்வி – திரு.சுமந்திரனைச் சந்தித்து வேற்றுமைகளைக் களைந்தால் என்ன?

பதில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுமந்திரன் எப்போது தலைவராகினார்?

11. கேள்வி – தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ ஆர்;.சம்பந்தன் மற்றும் கௌரவ சுமந்திரன் ஆகியோரின் அரசியல் எதிர்பார்ப்புக்களையும் மனோபாவங்களைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் – எம் மக்களின் எதிர்பார்ப்புக்கள், தேவைகள், அவசியங்களில் இருந்து எட்டியே நிற்கின்றார்கள் அவர்கள். அவர்களைத் தொடர்ந்து இருக்க விட்டால் எமது அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம். எம் மக்களின் உண்மையான அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. தவறான தமது கருத்துக்களை மட்டுமே சரியென்ற மனோநிலையில் அவர்கள் இருக்கின்றார்கள்.

12. கேள்வி – தமிழர்களின் நீண்டகால போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பென்ன? தமிழர்கள் சார்பாக நீங்கள் பேசியுள்ளீர்களா?

பதில் – எமது தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம் பெயர் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் புலம் பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்தப் பயப்பட்டு நின்றார்கள். தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் தான் எமது இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் எங்கள் பலம்;.
2001ம் ஆண்டு மும்மொழிகளிலும் உச்ச நீதிமன்ற வரவேற்பின் போது பேசுகையில் தமிழ் மக்களுக்கான பொறுப்பான நியாயமான தீர்வு பற்றிப் பிரஸ்தாபித்தேன்.

13. கேள்வி – சிலர் உங்களை ஒரு பிடிவாதக்காரர் என்கின்றார்கள். நீங்கள் நினைத்ததையே செய்யப் பார்ப்பவர் என்பதால் உங்கள் மீதிருந்த மதிப்பு விட்டுப் போய் விட்டதாகக் கூறுகின்றார்கள். உங்கள் பதில் என்ன?
பதில் – இவ்வாறான விமர்சனங்கள் பல, பொதுமக்கள் பாவனைக்காக சிலரால் வெளியிடப்பட்டு வருகின்றன. இது போன்ற இன்னொரு விமர்சனந்தான் நாங்கள் அபிவிருத்திக்குத் தரும் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகின்றோம் என்பது. சென்ற ஐந்து வருடங்களில் ஒரு சதங்கூட திருப்பி அனுப்பப்படவில்;லை. என்றாலும் தொடர்ந்து இவ்வாறான விமர்சனங்கள் சுற்றி வருகின்றன.

14. கேள்வி – உங்கள் அரசியல் செல்வாக்கு தமிழ் மக்கள் வசம் இருக்கின்றதா? உங்களை அறிமுகப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கின்றதா அல்லது நீங்கள் இணைத்தலைவராகப் பதவி வகிக்கும் தமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்றதா?
பதில் – என்னை உன்னிப்பாகப் பார்த்துக் கவனித்து என்னை மதிப்பீடு செய்து வைத்திருக்கும் என் மக்களிடந்தான் இருக்கின்றது.

15. கேள்வி – மக்கள் வசம் உங்கள் செல்வாக்கு இருக்கின்றது என்றால் அவர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
பதில் – எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது ஆயிரக் கணக்கில் வெகுண்டு திரண்ட எம் மக்களுக்கு அவர்களுடன் நான் இருப்பேன் என்று கூறியிருந்தேன். என் வாக்கைக் காப்பாற்ற நான் முனைந்துள்ளேன். இறைவன் வழிவிட்டால் நான் அவர்களுடன் தான் இருப்பேன்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar September 9, 2018 - 8:56 pm

Though here the fact is there over the CM’s answers. But undeniably certain factors would not changed any more. One withdrawing the state armed forces in those northern regions, other however state powered by majority community always try it’s fullest effort in atmost empower it’s stands in those so call those days vulnerable so hostile areas manned as well clandestine forces ruled by militants or so call freedom fighters in favour of certain particular community such as north and east. There that state power would do at it’s maximum inevitably. That is the fact. There one plan B alternative why can’t most of those tamil community members settled down back in those days before 1958 era in over southern parts of beautiful Sri Lanka rather in those in habitable landscape of northern regions ha ha ha. Just empowering over here bit close to the neck of state machinery rather far away from it. Just be close and high light all mall practices in state machinery no equitable distribution Jobs, resources, other fare share of commercial activities, industrialization etc etc make other foreign delegates as well such foreign consulate better known over this. Even there are dense tamil population most of southern parts of Sri lanka as well up hill country. But Sri Lankan state machinery function only sinhala language implementation by all forms were issued in sinhala. Though the tamils how they would full fill their desires or how state execute any function in favour of those tamil speaking hindu, muslim, as well indian origin as well Jaffna origin tamil population lives in those areas. In fact there is no more english link language forms were as well not usage in these areas. There that has to highlighted if Sri Lankan state wants conciliation amongst those diversified community lives in Sri Lanka like Singapore. Other wise that would make always a conflict state. This is my humble view. May God bless mother Sri lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More