குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து , குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் 75 நபர்களை கைது செய்த பருத்தித்துறை காவல்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
பருத்துறை- உதயதாரகை மைதானத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு உள்ளது. பருத்துறை உதயதாரகை மைதானத்தில் பலாலி- விண்மீன் அணிக்கும், சக்கோட்டை- சென்சேவியர் அணிக்கும் இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போதே குறித்த முறுகல் நிலை தோன்றியது.
அதனை யடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலி விண்மீன் அணியைச் சேர்ந்த இளைஞர் குழு இரண்டு பேருந்துக்களில் சக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது.இதனையடுத்து இரு குழுக்களுக்கிடையிலும் முறுகல் நிலை ஏற்ப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட வந்தார்கள் என 75 பேரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வர்களையும் அவர்கள் பயணித்த பேருந்துக்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த காவல்துறையினர் கடுமையாக அவர்களை எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.