லிபியாவின் தலைநகர் திரிபோலியில், தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தினுள் ஆயுததாரிகள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் இரண்டு ஊழியர்களும் இரண்டு ஆயுததாரிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்கட்டடத்தில் இருந்து வெடி மற்றும் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக, சாட்சிகள் தெரிவித்துள்ளன.திரிபோலியில் அரசாங்கம் பெயரளவிலேயே ஆட்சி செய்து வருகின்ற நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆயுதக் குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர். அதேவேளை எண்ணெய் நிறுவனத்தின் தலைவரான முஸ்தபா சனாலாஹ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சாட்சி ஒருவர் தெரிவித்ததாக ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கட்டடத்தில் இருந்து வெளியே வரும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் தயாராக உள்ளனர் எனவும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
லிபியாவின் பொருளாதாரத்தில் எண்ணெய் வளம் முக்கிய பங்கு வகிக்கின்ற நிலையில் நீண்ட காலம் ஆட்சி செய்த கடாபி 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டதையடுத்து தொடர்ந்துஅங்கு பல வன்முறை சம்பவங்கள் வெடித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது