இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்தியாவிற்கான பயணம் இந்திய அரசாங்கத்துடனான அவரது உறவுகள் மீண்டும் நெருக்கமடைவதை புலப்படுத்துகின்றது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
2006 முதல் 2009 வரை மேற்கொள்ளப்பட்ட இராணுவநடவடிக்கைகள் மூலம் விடுதலைப்புலிகளின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர் என கருதப்படும் மகிந்த ராஜபக்ச சுப்பிரமணியம் சுவாமியின் தலைமையிலான விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என அழைக்கப்படும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் இந்திய இலங்கை உறவுகள் குறித்து உரையாற்றவுள்ளார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இந்திய பிரதமர் பாதுகாப்பு ஆலோசகர் காங்கிரஸின் முன்னாள் தலைவி உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களையும் மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார் என தெரிவித்துள்ள இந்து, இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த சந்திப்புகள் குறித்துஇதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை இவை தனிப்பட்ட சந்திப்புகளாக அமையலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுடன் இந்தியாவிற்கு சென்றுள்ள மகன் நாமல் ராஜபக்சவை அரசியலில் வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பின்னணியை ராஜபக்ச தரப்பினர் முன்னெடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்து நாளிதழ் மகிந்த ராஜபக்ச தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மகிந்த ராஜபக்ச மூன்று வருடங்களாக ஆட்சியில் இல்லாதபோதிலும் தொடர்ந்தும் வலுவான சக்தியாக விளங்குகின்றார் பிளவுபட்டுள்ள அரசாங்கத்திற்கு அடிக்கடி சவால் விடுக்கின்றார் எனவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.