குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் 119 கிலோகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை, கடலில் சுற்றுக்காவலில் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழி மறித்து சோதனை செய்த போது , 48 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 118 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள்.
அத்துடன் படகில் பயணித்த மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் நேற்று திங்கட்கிழமை மாலை காங்கேசன்துறை காவல்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை, மன்னார் மற்றும் பாலாவியை சேர்ந்தவர்கள் எனவும் , இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சாவை , கைமாற்றி எடுத்து வந்த போதே அவர்களை கடற்படையினர் கைது செய்ததாகவும், அவர்களிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேவேளை , காரைநகரில் முச்சக்கர வண்டியில் கஞ்சா போதை பொருள் கடத்துவதாக யாழ். காவல்துறை சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரின் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதனுள் இருந்து ஒரு கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்டவரையும் , அவரிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் நேற்று திங்கட்கிழமை தாம் ஒப்படைத்ததாக யாழ். காவல்துறை சிறப்பு அதிரடி படையினர் தெரிவித்தனர்.