குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மல்லாகம் நீதிமன்ற நீதிவானின் கைத்தொலைபேசி நீதிவானின் காருக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்டுள்ளதாக யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும் அந்த இளைஞன் குற்றச்சாட்டை மறுப்பதாக காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கொடியிறக்கத் திருவிழா நேற்று முன்தினம் மாலை (09) இடம்பெற்ற போது நல்லூர் கந்தனை தரிசிப்பதற்காக மல்லாகம் நீதிமன்ற நீதிவான், அவரது குடும்பத்தினருடன், காரில் சென்றுள்ளார்.
நீதிவானை இறக்கிவிட்டு, காரை நிறுத்திவைத்துள்ள அவரது மெய்ப் பாதுகாவலரான காவல்துறை உத்தியோகத்தர் காரின் கண்ணாடியைப் பூட்டிவிட மறந்துள்ளார்.இந்தநிலையிலேயே காரிற்குள் இருந்த நீதிவானின் கைபேசி திருடப்பட்டுள்ளது.
வழிபாட்டை முடித்து வந்த போதே, காரில் இருந்த கைபேசியை நீதிவான், மெய்பாதுகாவலரிடம் கேட்டுள்ள போதே அதனைக் காணவில்லை என மெய்ப்பாதுகாவலரால் தெரிவிக்கப்பட்டது.கைபேசி திருடப்பட்டதை அறிந்த நீதிவான், அது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், நல்லூர் ஆலய வளாகத்தில் நடமாடிய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது