இந்துக் கோவில்களில் அல்லது அதன் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலி, பறவைகள் பலியிடுவதை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
மிருக பலி சம்பந்தமாக சட்ட ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், அது தொடர்பான சட்ட வரைவை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் பெயரால் செய்யப்படுகின்ற மிருக வதையை ஒழுங்குபடுத்துவதற்கு நிறுவன ரீதியான முறையொன்று இல்லாததுடன், கோவில்களின் நிர்வாகம், தனி நபரினால் அல்லது மக்களால் நியமிக்கப்பட்ட முகாமைக் குழுக்களால் நடத்தப்படுகின்றது.
மிருகபலி இந்து மதத்தின் பாரம்பரிய முறை என்ற போதிலும் பெரும்பாலான இந்து மதத்தினர் இந்த முறையை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுடன், மிருக பலியிடுவதை தண்டனை வழங்கக் கூடிய சட்டமாக்கப்பட வேண்டும் என்பது இந்து மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட இலங்கை இந்து சங்கத்தின் கருத்தாகும் என இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.