சர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருப்பது, உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்தில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்று உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றில் 123 நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளன. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இதில் இணைந்துகொள்ளவில்லை.
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்று விசாரணை நடத்தி நீதி வழங்குகிறது.
இந்த சர்வதேச நீதிமன்றை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இப்போது அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் மிகக்கடுமையாக விமர்சித்து இருப்பதுடன், பொருளாதார தடை என்ற விடயத்தை சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
சர்வதேச நீதிமன்றின் சட்டத்தரணி பாதோ பென்சவுடா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் செய்த போர்க்குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை சர்வதேச நீதிமன்று பரிசீலித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் ரகசிய காவல் மையங்களில், கைது செய்து அடைத்தவர்களை அமெரிக்க ராணுவம் சித்ரவதை செய்ததற்கு அர்த்தம் உள்ள ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச நீதிமன்ற அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும், காசா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் இஸ்ரேல் மீது விசாரனை நடத்த பாலஸ்தீனம் சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த இரண்டு பிரதான விடயங்கள் குறித்து, அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றின் மீது கடுமையான அதிர்ப்தி ஏற்பட்டதன் விளைவாக பொருளாதார தடை என்ற விடயத்தின் மூலமாக அதன் மீது அழுத்தங்களை பிரயோகிக்க அமெரிக்கா முற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.