குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடமாகாணசபையின் முதலமைச்சரும், நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்திற்கு செல்வது தமிழர்களுக்கு கிடைத்த தன்னாட்சி சபையான வடமாகாணசபையின் வரலாற்றில் கரும்புள்ளியாக அமையும். என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
வடமாகாணசபையின் 131வது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றிருந்தது.
இதன்போது வழக்கம்போல் மாகாண அமைச்சர்கள் யார்? என கேள்வி எழுப்பப்பட்டு குழப்பம் உருவானது.
இந்நிலையில் முதலமைச்சர் அவையில் இருக்கும்போதே கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்படி கோரிக்கையினை முதலமைச்சருக்கு முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் அவைதலைவர் கூறுகையில்,
மாகாணசபை அமைச்சர்கள் விவகாரம் மற்றும் அதனால் முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் நீதிமன்றம் சென்றமை போன்ற விடயங்கள் தமிழர்களுக்கு கிடைத்த 1வது தன்னாட்சி சபையான மாகாணசபை வரலாற்றில் கரும்புள்ளியாக மாறவுள்ளது.
இந்த மண்ணில் நான் அரச அதிகாரியாக மட்டும் இருக்கவில்லை. தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் பல்வேறு வழிகளில் என்னுடைய அழுத்தம் திருத்தமான பங்களிப்பு இருந்திருக்கின்றது. அதனால் உயிராபத்துக்களையும் சந்தித்தவன் நான்.
அந்தவகையில் இந்த அமைச்சர் சபை குழப்பத்தை அவை தலைவர் என்பதற்கும் அப்பால் சீ.வி.கே.சிவஞானமாக தீர்த்து வைப்பதற்கு பங்களிக்கும் பொறுப்பு எனக்குள்ளது.
அந்தவகையில் இதற்கு முன்னரும் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருடன் சுமுகமாக பேச்சுவார்த்தைகளை நடாத்தி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்தேன். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில் இன்றளவும் இந்த சபையில் 29.06.2018ம் திகதி தொடக்கம் பொறுப்கூறும் சட்டவலுவுள்ள அமைச்சர் சபை இல்லை.
இந்த நிலை தொடரவேண்டுமா? என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டியது கட்டாயம் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் ஒருதடவை நீதிமன்றத்திற்கு செல்வதை நான் விரும்பவில்லை.
ஆகவே 18ம் திகதிக்கு முன்னதாக இந்த அமைச்சர் விவகாரம் குறித்து முதலமைச்சர் தீர்வினை காணவேண்டும். குறிப்பாக முதலமைச்சருடைய நற்பெயருக்கு குந்தகம் இல்லாமல் அல்லது கௌரவத்தை பாதிக்காமல் இருக்கும் அமைச்சர் சபையை இராஜினாமா செய்துவிட்டு உடனேயே புதிய அமைச்சர் சபையை நியமனம் செய்யுங்கள்.
இதற்காக ஆளுநருக்கும், முதலமைச்சருக்குமிடையிலான தொடர்பாடலை நானே முன்வந்து செய்து கொடுக்கிறேன். மேலும் டெனீஸ்வரன் இடைப்பட்ட காலத்திற்கான சம்பள நிலுவையை கேட்பார் என நியமான ஐயப்பாடு இருக்குமானால் டெனீஸ்வரன் அந்த சம்பள நிலுவையை கேட்கமாட்டார். என்பதை இந்த சபை முன்னிலையில் உத்தரவாதமாக முதலமைச்சருக்கு கொடுக்கிறேன். எனவே முதலமைச்சர் இந்த விடயத்தை சுமுகமாக தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலளிக்கையில், இங்கு பேசப்படும் பல விடயங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் இருக்கிறது. காரணம் சபையில் பேசப்படும் விடயங்களை நீதிமன்றில் கூட கேள்விக்குட்படுத்த இயலாது.
என உள்ளபோதும் நான் இங்கு பேசிய விடயங்கள் நீதிமன்ற அவமதிப்பாக அங்கே காட்டப்பட்டுள்ளது. ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பேன். இப்போது பேசாதிருப்பதற்கு சபை மன்னிக்கவேண்டும் என்றார்.