குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சட்டவிரோத கட்டடங்களை இடிக்கக நாம் தயார் , நீங்கள் தயாரா என சபை உறுப்பினர்கள் மௌனம் காத்தனர். அதன் மூலம் சட்டவிரோத கட்டடங்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கின்றார்களா என்ற கேள்வி, நல்லூர் பிரதேச சபையில் எழுந்துள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் த. தியாகமூர்த்தி தலைமையில் நேற்றைய தினம் செவ்வாக்கிழமை காலை நடைபெற்றது.
அதன் போது தவிசாளர், சபை எல்லைக்குள் உள்ள சட்டவிரோத கட்டடங்களை அனுமதிக்க முடியாது. சபை பொறுப்பேற்ற முதல் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முகமாக சட்டவிரோத கட்டடங்களை நிர்மாணிக்க முடியாது எனவும் , ஏற்கனவே நிர்மாணிக்கபட்டு உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் எனவும் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்து இருக்கின்றோம்.
இருந்தாலும் அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கபடுகின்றன. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நான் தயார்.சட்டவிரோத கட்டடங்களை இடித்தழிப்போம் அதற்கு சபை ஒத்துழைப்பு தேவை. நான் தயார் நீங்கள் தயாரா ? என உறுப்பினர்களிடம் கேட்டார்.
அதற்கு உறுப்பினர்கள் எவரும் பதிலளிக்காது மௌனம் காத்தனர். அதனால் சபை ஒரு சில நிமிடங்கள் நிசப்தமாக இருந்தது.
அதனை அடுத்து சபை செயலாளர், ஒரு பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன என அறிந்தால் அவற்றை அதிகாரிகள் தான் வந்து நிறுத்த வேண்டும் என இல்லை. அந்த வட்டார உறுப்பினரால் கூட அவற்றை தடுத்து நிறுத்த ,முடியும்.
அத்துடன் கட்டட அனுமதி தொடர்பிலான விளக்கங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதி அபிவிருத்தி திணைக்களம், சுகாதார மருத்துவ பணிமனை, சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் ஊடாக சபை உறுப்பினர்களுக்கு வழங்க எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேபோன்று சட்டவிரோத கட்டடங்களை அகற்ற எமது உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் தயாராகவே இருக்கின்றார்கள். சபையின் அனுமதி கிடைத்தால் நாம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
அதன் போதும் சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்து மௌனம் காத்தனர். அதனால் சட்டவிரோதமான கட்டடம் தொடர்பிலான விடயத்தினை கைவிட்டு அடுத்த விடயத்திற்கு தவிசாளர் சென்றார்.