2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும்26ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருப்பதற்கு முன்னாள் கடற்படைத் தளபதியாக இருந்த தற்போதைய முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தன உதவி ஒத்தாசை புரிந்துள்ளமைக்கு நேரடி சாட்சிகள் கிடைத்திருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதன்படி முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தன கடந்த 10ம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என குறித்த திகதிக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் முன்னலையாகாமல் வெளிநாடு சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் அவர் இம்மாதம் 19ம் திகதி மீண்டும் நாடு திருப்புவார் என்று அறியக் கிடைத்துள்ளதாகவும், அதன்பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெற்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.