நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்ததாக பிரித்தானிய நீதிமன்றில் முன்னிலையான விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.
பிரித்தானியாவில் உள்ள அவரை இந்தியா கொண்டு செல்ல , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டு செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் காணொளியை பிரித்தானிய நீதிபதி கேட்டதன் பேரில், இந்தியா தாக்கல் செய்தது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா முன்னிலையானார். பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்ததாக தெரிவித்தார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாக தெரிவித்த அவர் எனினும், நீதிமன்றம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” எனவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, “சிபிஐ கொடுத்த நிர்பந்தம் காரணமாகவே மல்லையா மீது வங்கிகள் முறைப்பாடுகள் அளித்ததாக மல்லையா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.