நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஈரான் முன்னாள் துணை ஜனாதிபதி எஸ்பன்டியார் ரஹிம் மஷாயிக்கு ஆறரை வருடங்கள்; சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 முதல் 2013 காலப்பகுதியில் ஈரான் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹ்மவுத் அஹமடினெஜாட் கடந்த 2009- ஆண்டு எஸ்பன்டியார் ரஹிம் மஷாயியை துணை ஜனாதிபதியாக நியமித்தார்.
இந்த நியமனத்துக்கு அந்நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய மதத்தலைவரான அயாத்துல்லா அலி கமேனி அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இதனால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இஸ்லாமிய மதத்தலைவர்களை கடுமையாக தாக்கி பேசி வந்த மஷாயி அவர்கள் இஸ்ரேலுடன் நட்பு பாராட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.
எனினும் ஜனாதிபதி அஹமதினெஜாத்தின் மகன் ரஹிம் மஷாயியின் மகளை திருமணம் செய்திருந்ததால் அவர்மீது அப்போது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருந்தது.கடந்த 2013- ஆண்டு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஈரானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக மஷாயி மீது வழக்கு தொடரப்பட்டது.
இதேபோல், முன்னாள் ஜனாதிபதியின் ஊடகத்துறை ஆலோசகராக இருந்த அலி அக்பர் ஜவன்பெக்ர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் இருவருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த குற்றத்துக்கு ஐந்தாண்டு, நாட்டைப் பற்றிய தவறான முறையில் பிரசாரம் செய்ததற்காக ஓராண்டு மற்றும் நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்கு 6 மாதங்கள் என முன்னாள் துணை ஜனாதிபதி எஸ்பன்டியார் ரஹிம் மஷாயி-க்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகத்துறை ஆலோசகராக இருந்த அலி அக்பர் ஜவன்பெக்ருக்கு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த குற்றத்துக்காக நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.