ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (13.09.18) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானியான (சிடீஎஸ்), கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன விவகாரம் தொடர்பிலேயே ஆராயப்படவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளத.
வெளிநாட்டுக்கு பயணம் செய்துள்ள, பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானியான, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, நாடு திரும்பியதும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று (12) கொண்டுவந்திருந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதியால் நடத்தப்பட உள்ள அமைச்சரவையின் விசேட கூட்டத்தில் பங்கேற்குமாறு, சகல அமைச்சர்களுக்கும், நேற்று (1209.18) பகல், தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவர், மறைந்திருப்பதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரை சி.ஐ.டியினர் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இல்லை – அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (13.09.18) நண்பகல் அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாராந்த அமைச்சரை கூட்டம் நேற்று (12.09.18) நடைபெற்றதுடன் அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் நேற்று எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவசர அமைச்சரை கூட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலிக் சமரவிக்ரம, துமிந்த திஸாநாயக்க, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சாகல ரத்னாயக்க ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில் இந்த அவசர அமைச்சரவை கூட்டம் கூடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.