பிரித்தானியாவில் முன்னாள் ரஸ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ரஸ்ய நாட்டவர்கள் இருவர் தாங்கள் சுற்றுலாப் பயணிகள் என ரஸய அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களான இருவரும் ஸ்கிரிபாலையும் யூலியாவையும் கொல்ல கடந்த மார்ச் மாதம் கொலை செய்ய முயன்றதாகவும், அவர்கள் இருவரும் ஜி.ஆர்.யு. என்ற ரஸ்ய ராணுவ உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரித்தானியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அந்த இருவரையும் கண்டறிந்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் ரஸ்;யக் குடிமக்கள்தான் எனவும் ஆனால் அவர்கள் கிரிமினல்கள் அல்ல எனவும் ரஸ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் ன் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர்களே நடந்தது என்ன என்பதை விரைவில் கூறுவார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆர்.டி. என்ற ரஸ்ய அரசு நடத்தும் சர்வதேசத் தொலைக்காட்சியில் பேசிய அவர்கள், நச்சுத் தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் சாலிஸ்பரிக்கு சுற்றிப் பார்க்க சென்றிருந்ததாகவும், ஆனால் ஒரு மணி நேரத்தில் லண்டனுக்கு திரும்பிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
ரஸ்;ய கடவுச்சீட்டில் மார்ச் 2-ம் திகதி மொஸ்கோவில் இருந்து லண்டனுக்கு வந்ததாகக் காணப்படும் குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்த போதிய ஆதாரம் இருப்பதாக பிரித்தானியாவின் கிரௌன் புலனாய்வு சேவை தெரிவித்திருந்தது.
சாலிஸ்பரியின் வில்ட்ஷயரில் உள்ள ஸ்கிரிபால் வீட்டின் முன் கதவில் ராணுவ தரத்தில் உள்ள நோவிசோக் என்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருளை தெளித்த பிறகு அவர்கள் ரஸ்யா திரும்பியதாக இரண்டு நாட்களின் பின் காவற்துறை கூறியது.
இந்த தாக்குதலால் ஸ்கிரிபாலும், அவரது மகள் யூலியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு சில வாரம் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை தேறிய போதும் ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.