சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து உடனடியாக ஓய்வு பெறும் எண்ணமில்லை என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் அன்டர்சன் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 143 டெஸ்டில் விளையாடி மொத்தம் 564 விக்கெட்டுகள் கைப்பற்றி அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியிருந்தார்.
இந்தநிலையில் 36 வயதான ஜேம்ஸ் அன்டர்சன் வழங்கிய செவ்வியில் மெக்ராத்தின் சாதனையை தான் முறியடித்து இருந்தாலும், தன்னை விட சிறந்த பந்துவீச்சாளர்; மெக்ராத்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஓய்வு எண்ணம் இதுவரை எனது மனதில் உதிக்கவில்லை எனவும் அது குறித்து தான் சிந்திப்பதும் கிடையாது எனவும் சிறந்த திறனை வெளிப்படுத்துவதிலும், அடுத்த போட்டி மற்றும் அடுத்த தொடர் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.