அமெரிக்காவின் கடலோர பகுதியான கரோலினா நகரை புளோரன்ஸ் புயல் தாக்கியதில் தாய், குழந்தை உள்பட் 4 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி சென்றதனையடுத்து வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மற்றும் வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து , 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல்காற்று 100 கிமீ வேகத்தில் தாக்கியமையினால் எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தநிலையில் வடக்கு கரோலினாவில் புயலில் மரம் சாய்ந்து வீட்டின் மேல் விழுந்ததில் தாய், குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, புயல் தாக்கத்தில் சிக்கி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் குறித்த 3 மாகாணங்களிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு இருந்தது.
புயல் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.