பிலிப்பைன்ஸினைத் தாக்கிய மங்குட் புயல் இன்று கடுமையாக தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று தாக்கிய இந்தப் புயலானது இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது. புயல் காரணமாக அந்நாட்டின் வடக்கு கடற்கரை பகுதியில் 200 கி.மீ. வேகத்தில் கடும் காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருவதனர் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொருங்கியுள்ளதுடன் மின்சாரமும் தடைபட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலுpந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
4-வது ரகம் என கணிக்கப்பட்டுள்ள இந்த மங்குட் புயலால் ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் ஏற்படுத்திய பாதிப்புகளினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், பலரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.