குளோபல் தமிழ் செய்தியாளர்….
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த தமிழ் மாணவர்களை ஒன்றிணைத்து தமிழமுதம் தமிழ் விழா 2018 நிகழ்ச்சியை நாளை திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடாத்தவுள்ளது.
இந்த நி்கழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக நாளை காலை எட்டுமணிக்கு யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மைதானத்தை நோக்கி மாபெரும் கலை, கலாசார எழுச்சிப் பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளது. காலை அரங்கின் நிகழ்வுகள் சங்கிலியன் அரங்கிலும் மாலை நிகழ்வுகள் பண்டாரவன்னியன் அரங்கிலும் இடம்பெறவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் க. ஜாக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் நிகழ்வில், பிரதம விருந்தினராக தமிழகத்தை சேர்ந்த பிரபல ஓவியர் முனைவர் புகழேந்தி கலந்து கொள்கிறார். ஈழத் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் சார்ந்த நிகழ்வுகளுமே முழுக்க முழுக்க நடைபெறவுள்ளன.
2009 போருக்குப் பின்னர், தமிழ் மக்களின் பாரம்பரிய கலை, கலாசாரத்தின் மாபெரும் எழுச்சி நிகழ்வாக இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்காக, மாணவர்கள், கலைஞர்கள், மக்கள் அனைவரது ஒத்துழைப்பையும் அவர்களின் வரவையும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டியுள்ளது.