இஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ஏவுகணை நேற்று (16.09.18) இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதில் பிரித்தானியாவுக்குச் சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ஏவுகணை ஆகும்.
இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-42 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வரும் காலங்களில் செலுத்த உள்ள செயற்கைக்கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவியாக இருக்கும். அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்திராயன்- 2 விண்ணில் செலுத்தப்படும்.
பி.எஸ்.எல்.வி ஏவுகணையின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்