166
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 16.09.2018 பிற்பகல் 4 மணிக்கு யாழ். பிரதான வீதியில் உள்ள கலைத்தூது கலையகத்தில் மண்டபம் நிறைந்த ஆர்வலர்களின் பங்கேற்புடன் சிறப்புற இடம்பெற்றது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு தனிநாயகம் அடிகள் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தல் மலர் வணக்கம் செய்தலுடன் ஆரம்பமாகியது. யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கியின் முன்பாக அமைந்துள்ள அடிகளாரின் உருவச் சிலைக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து அருட்தந்தையர்கள், தமிழ்ச்சங்கத்தினர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் யாழ். மாநகர ஆணையாளர் , பிரதி ஆணையாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் மலர் வணக்கம் செலுத்தினர்.
கலைத்தூது கலையகத்தில் தொடர்ந்து நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தசிறி ஆற்றினார். தனிநாயகம் அடிகளார் ஆய்வு மைய பணிப்பாளர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் அடிகளார் ஆசியுரை வழங்கினார். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் விரிவுரையாளர் ச.லலீசன் தொடக்கவுரையை ஆற்றினார்.
‘தமிழ் அடையாள உருவாக்கம் – திருவள்ளுவரை முன்னிறுத்தி…’ என்ற பொருளில் தனிநாயகம் அடிகள் நினைவுப் பேருரை இடம்பெற்றது. இதனைப் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் வழங்கினார்.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் 35 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளிடையே முன்னெடுத்த விவாதச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கவிஞர் புதுவை இரத்தினதுரை அணியும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுவாமி விபுலாநந்தர் அணியும் இதில் சொற்சமர் ஆடின.
இருபத்தோராம் நூற்றாண்டு தமிழை உறுதிசெய்யுமா? இறுதிசெய்யுமா? என வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. விறுவிறுப்பிற்கும் சபையோருடைய கரவொலிக்கும் நிகழ்ச்சியில் பஞ்சம் இருக்கவில்லை. தீர்ப்பு வழங்க கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த எழுவர் நடுவர்களாகப் பணியாற்றினர். நிறைவில் இறுதி செய்யும் என வாதிட்ட கிழக்கு மாகாண அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவபீட மாணவர் இருவர், பொறியியல் பீட மாணவர் ஒருவரை உள்ளடக்கிய சுவாமி விபுலாநந்தர் அணி இவ்வாண்டுக்கான தமிழ்ச்சங்க வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது. வெற்றிக்கேடயத்தை தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழங்கிக்கௌரவித்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் லோ. துஷிகரன் நன்றியுரை ஆற்றினார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love