கடந்த சில வாரங்களாக, பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத் தளபதி உள்ளிட்டோரை பகிரங்கமாக விமர்சித்து வந்த, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி பறிபோவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்மானம் குறித்து, தமது ஆலோசகர்களுடன் கலந்துரையாடல்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பொன்சேகாவின் விமர்சனங்கள் இராணுவத்தினரை கவலையடைச் செய்துள்ளதாகவும் , இது குறித்து பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி, இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதமருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வரும் நிலையில், சரத் பொன்சேகாவிடமிருந்து பீல்ட் மார்சல் பதவி அல்லது அமைச்சுப் பதவி பறிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.