குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும் என பாராளுமன்றஉறுப்பினர் விஐயகலாமகேஸ்வரன் தெரிவித்தார். வேலணை பிரதேச செயலர் பிரிவில் உத்தியோகபூர்வ பணி ஐனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்டஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் நல்லாட்சி அரசினால் வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அதிலும் குறிப்பாக முன்னைய அரசாங்கத்தினால் புறந்தள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பத்தினர் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
எனினும் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்ப்பதற்கு வடக்கில் புதிதாக தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். குறிப்பாக வடக்கில் உள்ள முன்னாள் போராளிகள் பலர் தமது தொழிலை தேடுவதற்கு உரிய கல்விதகுதி இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே வடக்கில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலம் பல்வேறு பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும. வடக்கிற்கு முதலீடு செய்ய வருபவர்கள் திருப்பி அனுப்பப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே அந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஐயகலா மகேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய வேலணை பிரதேச செயலர் பிரிவில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பணி ஐனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்டம் ஆரம்பநிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபைஉறுப்பினர்கள் பிரதேச செயலர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு பயனாளிகளுக்கு உதவி திட்டங்களையும் வழங்கி வைத்தனர்.