எதிர்க்கட்சி அரசியலுக்கு அஞ்சாத கட்சி என்றால் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வளர்த்த இந்த கட்சியை தவிர வேறெதுவும் இருக்கமுடியாது. எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களை ஆளும் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை (16) சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரை இழந்துவிட்டதாக நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தப் பேரியக்கம் மூலம் அவர் எங்களுடன் பெரும் சொத்தாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது காலத்தில் தோல்விகளை கண்டு நாங்கள் துவண்டுபோகவில்லை.
உற்சாகமாக அரசியல் செய்வதாக இருந்தால் எதிர்க்கட்சியில் அமரவேண்டும். இதற்கு தயாராக இருந்தால் நானும் தயார். அமைச்சு பதவிகள் இல்லாவிட்டாலும் கட்சி வாழும் என்பதை நிரூபித்த கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தவிர வேறெதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி யாருக்கும் கதவுகளை மூடவில்லை. கட்சியின் கதவு விசாலமாக திறந்து கிடக்கிறது. பிரிந்துசென்ற பலர் இன்று கதவுகளை தட்டுகின்றனர். தேர்தல் காலங்களில் சிலர் வெளியேறுவதுண்டு, சென்றவர்களும் திரும்பி வருவதுண்டு. வருகின்றவர்களுக்கு பதவிகளும் தாராளமாக காத்திருக்கின்றன என்றார்.
இந்நிகழ்வில், கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.